ADDED : ஜூலை 23, 2011 10:44 PM
கம்பம் : நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லாததால் விவசாயத்துறை அலுவலகங்களில் விதைகடலை மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை மானாவாரி மற்றும் இறவை பாசனத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் லோயர்கேம்பில் ஆரம்பித்து கூடலூர், கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் என பல ஊர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் நிலக்கடலை மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நிலக்கடலை சாகுபடி பரபபை விவசாயிகள் குறைத்து வருகின்றனர். மலையடிவாரங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை ஒரு முக்கிய காரணமாகும். அது மட்டுமல்லமால் விதைகடலை விலை, பராமரிப்பு பிரச்னைகளும் நிலக்கடலையை விட்டு விவசாயிகளை விலகிட வைத்தது.
இந்நிலையில் ஆடிப்பட்டத்திற்கென ஒவ்வொரு விவசாய விரிவாக்க அலுவலகங்களிலும் நூற்றுக்கணக்கான மூடைகள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு எக்டேருக்கு 200 கிலோ வரை தரப்படுகிறது. கிலோவிற்கு ரூ. 12 மானியமாகவும் வழங்கப்படுகிறது. இருந்த போதும் விவசாயிகள் நிலக்கடலையை வாங்க விரும்பவில்லை.
விவசாயிகள் சிலர் கூறுகையில்: சீசனில் மழை பெய்யாதது, விதைக்கடலை விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் விவசாயிகள் கடலை சாகுபடியை விரும்பவில்லை. ஒரு எக்டேருக்கு 80 கிலோ விதைக்கடலை தேவைப்படும். ஆனால் எள், சூரியகாந்தி உள்ளிட்ட பிற பயிர்கள் இவ்வளவு தேவையில்லை. எனவே விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியை குறைத்து வருகின்றனர். அரசு நிலக்கடலைக்கு வழங்கும் மானியத்தை உயர்த்தினால், நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது' என்றனர். கம்பம் பள்ளத்தாக்கில் குறைந்து வரும் நிலக்கடலை சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


