Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராமேஸ்வரம், சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை கோலாகலம்

ராமேஸ்வரம், சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை கோலாகலம்

ராமேஸ்வரம், சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை கோலாகலம்

ராமேஸ்வரம், சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை கோலாகலம்

ADDED : ஜூலை 31, 2011 01:34 AM


Google News
Latest Tamil News

ராமேஸ்வரம் : ஆடி அமாவாசையை முன்னிட்டு, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இம்முறை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர்.

இதனால் ராமேஸ்வரம் திணறியது. இதேபோல் சதுரகிரி மலையிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் நேற்று அதிகாலை 3 மணிக்கே வெளியூர் பக்தர்கள், கடலில் தீர்த்தமாடி திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். காலை 6 மணிக்கு ஸ்ரீராமர், லட்சுமணர் மற்றும் சீதாதேவியுடன் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினர்.



நீராடிய பின் பக்தர்கள், நான்குரத வீதியில் நீண்ட வரிசையில் நின்று, கோயிலில் உள்ள தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளை தரிசித்தனர். காலை 11 மணிக்கு பர்வத வர்த்தனி அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி, நான்குரத வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் தலைமையில் மதுரை, சிவகங்கை இணை கமிஷனர்கள், விருதுநகர், பரமக்குடி உதவி கமிஷனர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர். போதுமான அளவிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.



சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள், சாதுக்கள் ஆபத்தான மலைப் பாதைகளில் ஏறி, சுவாமியை தரிசனம் செய்தனர். சதுரகிரி மலை: மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி, சந்தன மகாதேவி, பிலாவடி கருப்பசாமி கோயில்களும் சித்தர்கள் வாழ்ந்த குகைளும் உள்ளன. நேற்று அதிகாலை சுவாமிகளுக்கு தேன், பால் உட்பட 18 விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த சுவாமிகளை, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர்.



தாணிப்பாறை, வாழைத்தோப்பு, உப்புத்துறை ஆகிய 3 மலைப் பாதைகள் வழியாக பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். தாணிப்பாறை மலைப் பாதையில் சோணைத் தலைவாசல், அத்தியூற்று உட்பட பல இடங்களில் நேற்று காலை முதல்

நெரிசல் ஏற்பட்டது. வாழைத்தோப்பு பாதையில் ஒன்றிரண்டு ஆபத்தான இடங்களை கடப்பதற்கு பக்தர்கள் கஷ்டப்பட்டனர். தாணிப்பாறையில் இருந்து வழுக்குப்பாறைக்கு செல்லும் பகுதியில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து 2 மணி நேரம் எரிந்தது. தீ அணைந்த பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.



தாணிப்பாறை, வாழைத்தோப்பு, உப்புத்துறை, மாவூற்று ஆகிய மலை அடிவாரங்களில் பக்தர்கள் கூடாரம் அமைத்து, பொங்கல் வைத்தும், கிடாக்கள் வெட்டியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் மடம் உட்பட அமைப்புகளின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி பரத நாட்டியம், சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி நடந்தன. சாப்டூர், சேடப்பட்டி, குன்னூர், கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில் அடிவாரங்களிலும், மலையிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. பேரையூர் டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



ஏற்பாடுகளை தக்கார் செந்தில்வேலவன், நிர்வாக அதிகாரி ஜவஹர் மற்றும் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் செய்திருந்தனர். சேதுக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராட, நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். வழக்கத்தை விட இந்தாண்டு கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 கி.மீ., தூரத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. முதியவர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். நீராடிய பின், அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர்.



இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் 48வது திருத்தலமாக விளங்கும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையன்று வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். கோயில் மடப்பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட இந்த பாயாசத்தை பக்தர்கள் குடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.



தேனி: தேனி மாவட்டம் சுருளியில் நேற்று அதிகாலை முதல் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இரவங்காலாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு, அருவியில் நீர் கொட்டியது. பக்தர்கள் அருவியில் குளித்து, இங்குள்ள வேலப்பரை தரிசனம் செய்தனர். ஆற்றங்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பலர் அன்னதானம் வழங்கினர். கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.



சதுரகிரி மலையில் தேவை தண்ணீர் வசதி : சதுரகிரி மலை உச்சியில் பக்தர்களுக்கு தண்ணீர் வசதி இல்லாததால், மலையில் மொட்டை எடுத்தவர்கள் அடிவாரத்தில் வந்து குளித்தனர். ஒருநாள், மலையில் தங்கி வருவோம் என சென்றவர்கள், தண்ணீர் பற்றாக்குறையால் உடனே திரும்பி விட்டனர். இரவு நேரத்தில் மலைப் பாதையில் வருபவர்கள் வெளிச்சத்திற்காக டயர், தீப்பந்தங்களை கொளுத்தியபடி வருவதை நிர்வாகம் தடை செய்ய வேண்டும். இதன்மூலம் வனப்பகுதியில் ஆங்காங்கே தீப்பிடிப்பதை தவிர்க்கலாம்.



ராமேஸ்வரத்தில் எகிறிய கட்டணம் : வழக்கத்தைவிட அதிகளவு பக்தர்கள் கோயிலுக்குள் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்த போதும், எப்போதும் இல்லாத வகையில் கோயில் பிரகாரங்கள், சுவாமி சன்னதிகள் மிகவும் சுத்தமாக காணப்பட்டது. பக்தர்களும் பிரச்னையின்றி சுவாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், மடங்களின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் பானகம் வழங்கப்பட்டது. விடுதி வாடகை பல மடங்கு அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டு மற்றும் ரதவீதியில் நகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்பட்டது.



சேதுக்கரை வந்த பக்தர்கள் பாதிப்பு : ரோட்டில் ஆக்கிரமித்த கடைகளால் வாகன நெரிசல் ஏற்பட்டது. வழக்கம் போல் இந்த ஆண்டும் குடிநீர், உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி இல்லாதது மற்றும் பாதைகளை ஆக்கிரமித்த

பிச்சைக்காரர்களால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us