Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மேலப்பாளையம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் மீண்டும் இயங்க கைத்தறித்துறை நடவடிக்கை

மேலப்பாளையம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் மீண்டும் இயங்க கைத்தறித்துறை நடவடிக்கை

மேலப்பாளையம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் மீண்டும் இயங்க கைத்தறித்துறை நடவடிக்கை

மேலப்பாளையம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கம் மீண்டும் இயங்க கைத்தறித்துறை நடவடிக்கை

UPDATED : செப் 13, 2011 04:29 AMADDED : செப் 13, 2011 12:22 AM


Google News
திருநெல்வேலி : மேலப்பாளையம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் (ஓ.846) மீண்டும் சிறப்பாக இயங்க போதிய நிதி ஒதுக்கீடு, நூல் வழங்க கைத்தறித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலப்பாளையம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் ஓ.846 கடந்த 2.6.1958ம் ஆண்டு துவக்கப்பட்டது. முகம்மது உசேன் சாகிப் நினைவு நெசவுக் கூடத்தில் 30 கைத்தறி நெசவு தறிகள் அமைக்கப்பட்டுள்ளன. பணிகளை கவனிக்க மேஸ்திரி ஒருவரும் நியமிக்கப்பட்டு, சங்கம் நல்ல முறையில் இயங்கிவந்தது. இங்கு சாரம் (லுங்கி), கைத்தறி சீசன் துண்டு, மேட், சேலை ஆகியவை தயாரிக்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தறி நெய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பரமக்குறிச்சியில் இருந்து நூல் சப்ளை செய்யப்பட்டது. சாரம் நெய்வதற்கு கூலியாக 25 ரூபாயும், சீசன் துண்டு நெய்வதற்கு கூலியாக 4.50 ரூபாயும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பரமக்குறிச்சியில் இருந்து நூல் சப்ளை இல்லாததால் நூல் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கூலியும் போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது. அதாவது 40ம் நம்பர் நூல் 5 நூல் சிட்டம் நூற்பதற்கு கூலியாக ரூ.3.50 பைசா மட்டுமே வழங்கப்பட்டதாம். கடந்த 2009ம் ஆண்டு வரை இந்த நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் நல்ல முறையில் செயல்பட்டது. இந்த சங்கத்தில் இருந்து அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு வெள்ளைத்துண்டு (மேட்) தயாரித்து அனுப்பபட்டதாம். தமிழகத்திலேயே சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த கூட்டுறவு சங்கம் பாவு மற்றும் நூல் சப்ளை சரிவர செய்யப்படாததாலும், சங்கம் சரிவர இயங்காததாலும் ரூ.6 லட்சம் வரை கடன் பாக்கி ஏற்பட்டது. அதன்பின் அந்த கடன் தொகை கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் நெசவாளர் சங்கத்திற்கு நிதி மற்றும் நூல்கள் வழங்கப்படாததால் சரியாக இயங்காமல் முடங்கிப்போனது. தற்போது 2 அல்லது 3 பேர் மட்டுமே தறி நெய்து வருகின்றனர். கூட்டுறவு சங்கத்தில் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் தூசியும், குப்பைகளும் நிறைந்து பாழடைந்த குடோன் போல உள்ளது. தற்போது இந்த நெசவாளர் சங்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சங்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தும், நூல் மற்றும் பாவு வழங்கி மீண்டும் புத்துயிர் அளிக்க கைத்தறித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டுறவு நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். கைத்தறித்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்பு நெசவாளர்களிடம் எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us