ADDED : அக் 08, 2011 10:58 PM
திருப்பூர் : ''ஒரே பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்க வழிவகை செய்யப்படும்.
பொதுக்கழிப்பிட சுகாதாரத்தை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்படும்,'' என ம.தி.மு.க., மேயர் வேட்பாளர் நாகராஜ் பேசினார்.திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடும் ம.தி.மு.க., மேயர் வேட்பாளர் நாகராஜ், 46, 47, 48 மற்றும் 49வது வார்டு பகுதி மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:பூம்புகார் நகர் பகுதியில் 20 ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க முயற்சிப்பேன். குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்; உடைந்துள்ள குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படும். சந்தைப்பேட்டை பகுதியில் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன. பொதுக்கழிப்பிடத்தை பராமரிக்க தனிக்குழு அமைத்து, சுகாதாரம் கண்காணிக்கப்படும், என்றார்.அதன்பின், கரட்டாங்காடு, பெரிச்சிபாளையம், 50, 51, 52 மற்றும் 53வது வார்டுகளில் பிரசாரம் செய்தார். வாரம் ஒருமுறை குடிநீர்: 12, 13 மற்றும் 48வது வார்டில், அவர் பேசும்போது, ''பிரசாரத்துக்கு வார்டு பகுதிக்குள் வந்தால், மாநகராட்சியின் அவல நிலை கண்ணுக்கு தெரிகிறது. ''கொங்கணகிரி பகுதியில் சாக்கடை, தார் சாலை வசதிகள் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அதிக மக்கள் தொகை கொண்ட, மாஸ்கோ நகரில் ஆக்கிரமிப்பை அகற்றாமல், சிறிய அளவில் சாக்கடை கட்டி கொடுத்துள்ளனர்.''சிறிய அளவில் மழை பெய்தால் கூட, மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடும் அவல நிலை உள்ளது. காலேஜ் ரோட்டில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் வளைந்தும், நெளிந்தும், எப்போது விழுமோ என்றஅவலத்தில்உள்ளது. ''ஒவ்வொரு பகுதியின் குறைகள் கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படும். வாரம் ஒருமுறை கட்டாயம் குடிநீர் சப்ளை செய்யப்படும்; லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுவதும் தொடரும். குடிநீர், கழிப்பிடம், இருப்பிட வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்,'' என்றார்.


