பழநி பகுதியில் நீர் இல்லாததால் கருகும் 2000 ஏக்கர் நெற்பயிர்கள்
பழநி பகுதியில் நீர் இல்லாததால் கருகும் 2000 ஏக்கர் நெற்பயிர்கள்
பழநி பகுதியில் நீர் இல்லாததால் கருகும் 2000 ஏக்கர் நெற்பயிர்கள்
ADDED : ஜூலை 24, 2011 03:02 AM

பழநி : பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பழநி பகுதியில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகத் துவங்கியுள்ளன.
இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பழநி அருகே சண்முகநதி, பாலசமுத்திரம், தாமரைக்குளம், ராசாபுதூர், புதைச்சி, அழகாபுரி, புளியம்பட்டி, ஆண்டிபட்டி கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பாலாறுபொருந்தலாறு அணையை நம்பி சாகுபடி நடக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன், அணையில் ஓரளவு நீர் இருந்ததால், இப்பகுதியில் ஏடிடி 45 ரகம் கோடை சாகுபடியாக மேற்கொள்ளப்பட்டது. அணையில் உள்ள தடாகுளம் கண்மாய்க்கான ஷட்டரில் சேதம் ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக வெளியேறியது. தற்போது நீர் கிடைக்காமல், புதைச்சி, தாமரைக்குளம் பகுதியில் 2000 ஏக்கர் வயல்வெளி, பாளம் பாளமாக விரிசல் ஏற்பட்டு வறண்டு காணப்படுகிறது. இதனால் நெற்பயிர் கருகத் துவங்கியுள்ளது.
விவசாயி சந்திரசேகர் கூறியதாவது: ஷட்டர் சீரமைப்பிற்காக அதிகளவு தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றியதால் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. தடாகுளம், தாமரைக்குளங்களும் வறண்டுள்ளன. பால் பிடிக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களுக்கு, தண்ணீர் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ளோம். தண்ணீர் கிடைக்காது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்தால், சாகுபடி பணியை மேற்கொள்ளாமல் நஷ்டத்தை தவிர்த்திருப்போம், என்றார்.