சிறையிலிருந்து தப்பிய மாவோயிஸ்ட் தலைவரை கண்டுபிடிக்க பரிசு அறிவிப்பு
சிறையிலிருந்து தப்பிய மாவோயிஸ்ட் தலைவரை கண்டுபிடிக்க பரிசு அறிவிப்பு
சிறையிலிருந்து தப்பிய மாவோயிஸ்ட் தலைவரை கண்டுபிடிக்க பரிசு அறிவிப்பு
இம்பால் : மணிப்பூர் மாநிலம், இம்பால் கிழக்கு மாவட்ட போலீஸ் ஸ்டேஷனில் சிறை வைக்கப்பட்டிருந்த, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் படை தலைவர், சுரங்கம் தோண்டி அங்கிருந்து நேற்று முன்தினம் தப்பிச் சென்றார்.
மணிப்பூர் மாநிலத்தில் கேங்லிபாக் கம்யூனிஸ்ட் என்ற மாவோயிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் படைத் தலைவர் என தன்னைத்தானே அறிவித்துக் கொண்டவர் சுனில் மேய்தாய். பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது; அச்சுறுத்தி பணம் பறித்தது; கொலைகள் செய்தது என அவர் மீது பல வழக்குகள் உள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் 29ல் டில்லி போலீசார், அவரை பெங்களூரில் கைது செய்தனர். பாதுகாப்புடன் மணிப்பூர் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள போராம்பெட் போலீஸ் ஸ்டேஷனில் சிறை வைக்கப்பட்டார். காவலில் இருந்த சுனில் மேய்தாய், சுரங்கம் தோண்டி, அங்கிருந்து நேற்று முன்தினம் தப்பித்து சென்றார். இதனால், போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி கிட்சந்திர சிங் உட்பட ஏழு பேர், அலட்சியமாக இருந்ததற்காக தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தப்பிச்சென்ற சுனில் மேய்தாய் குறித்து, தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என, மணிப்பூர் மாநில போலீஸ் டி.ஐ.ஜி., ஜாய்குமார் அறிவித்துள்ளார். மேலும், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷென்பூர், தொய்பால் ஆகிய நான்கு பள்ளத்தாக்கு மாவட்டங்களிலும் உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.


