மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேரணி : உத்தவ், ராஜ்தாக்கரே பங்கேற்பு
மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேரணி : உத்தவ், ராஜ்தாக்கரே பங்கேற்பு
மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேரணி : உத்தவ், ராஜ்தாக்கரே பங்கேற்பு

மும்பை : இலவச வீடு உட்பட, மில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மகாராஷ்டிரா சட்டசபைக் கூட்டத்தொடரில், நேற்று எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், சபை மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 1980ம் ஆண்டு முதல், ஜவுளித் துறையில் மகாராஷ்டிரா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், வேலையிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மில் தொழிலாளர்கள் சார்பில், மும்பையில் நேற்று கண்டனப் பேரணி நடந்தது.
மும்பையின் தெற்கில் உள்ள பைகுல்லா, ஜிஜாபாய் மைதானத்தில் துவங்கிய பேரணி, ஆசாத் மைதானத்தில் நிறைவுற்றது. இதனால், மும்பையின் தெற்குப் பகுதி முழுவதும், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்தப் பேரணியில், சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே, பாலிவுட் நடிகர் நானா படேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறு ஆண்டுகளுக்கு முன், சிவசேனாவில் இருந்து விலகிய ராஜ் தாக்கரே புதிய கட்சி துவங்கினார். அதன்பின், உத்தவும், ராஜ் தாக்கரேவும் ஒரே போராட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை.
சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், '' இலவச வீடு என்பது, மில் தொழிலாளர்களின் பிறப்புரிமை. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, மாநில அரசு தவறினால், ஆகஸ்ட் 1ம் தேதி 'மும்பை பந்த்' நடத்தப்படும்,'' என்றார்.
உத்தவ் சென்றபின், பேரணியில் கலந்து கொண்ட ராஜ் தாக்கரே பேசும்போது, '' மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில சட்டசபையில், எதிர்க்கட்சியினர் ஒருங்கிணைந்து, போராடி வருகின்றனர். எனவே, 'மும்பை பந்த்' போன்ற போராட்டங்கள் எதுவும் தேவையில்லை,'' என்றார்.
'இலவச வீடு உட்பட, மில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்படும்,' என கடந்த வாரம் மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது. இதே பிரச்னை, நேற்று மகாராஷ்டிரா சட்டசபையிலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, சபை நடவடிக்கைகள் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டன.


