Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அதிகாரிகள் "மிஸ்ஸிங்'; சீறினார் கலெக்டர்!

அதிகாரிகள் "மிஸ்ஸிங்'; சீறினார் கலெக்டர்!

அதிகாரிகள் "மிஸ்ஸிங்'; சீறினார் கலெக்டர்!

அதிகாரிகள் "மிஸ்ஸிங்'; சீறினார் கலெக்டர்!

ADDED : ஆக 30, 2011 12:48 AM


Google News
திருப்பூர் : திருப்பூரில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு சில உயரதிகாரிகள் வராததால், கலெக்டர் கோபமடைந்தார். அதன்பின், டி.ஆர்.ஓ., மட்டும் வந்து கூட்டத்தில் பங்கேற்றார்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளி கள் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்று மனுக்கள் பெறப்பட்டன. வேலை வாய்ப்பு, மூன்று சக்கர வாகனம், உதவித்தொகை கேட்டு மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன்பின், மற்றவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 394 பேர் நேற்று நடந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.வழக்கமாக, குறைகேட்பு முகாமின்போது, கலெக்டருடன் டி.ஆர்.ஓ., மற்றும் துணை கலெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் மனுக்களை பெறுவர். நேற்று காலை 11.15 மணிக்கு கலெக்டர் வந்தார். மனுக்கள் பெறத்துவங்கியபோது, வேறெந்த அலுவலரும் வரவில்லை. கோபமுற்ற கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் திட்ட அலுவலர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார். தகவல் அறிந்து டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, தனது அறையிலிருந்து அவசரமாக வந்தார். தேர்தல் தொடர்பான பணிகளை பார்த்துக் கொண்டிருந்ததாக பதிலளித்தார்.திட்ட அலுவலர், வேறு பகுதிக்கு கள ஆய்வுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், கோபமடைந்த கலெக்டர், 'குறைகேட்பு கூட்டம் மிகவும் முக்கியமானது; வேறெந்த பணி இருந்தாலும் மாற்று ஏற்பாடு செய்து விட்டு, கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் திட்டமிட வேண்டும்,' என்று அறிவுறுத்தினார்.அதையடுத்து, டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராஜ், பிற்பட்டோர் நல அலுவலர் முத்துசாமி ஆகியோர் கலெக்டருடன் அமர்ந்து மனுக்களை பெற்றனர். காங்கயம் தாலுகாவை சேர்ந்த ஒருவருக்கு விவசாய கூலி உதவி தொகை மற்றும் ஆறு பேருக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை, திருப்பூரை சேர்ந்த ஐந்து பேருக்கு முதல்வரின் விபத்து நிவாரண உதவியாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டன. மடத்துக்குளம் கனரா வங்கி சார்பில், சுய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் மற்றும் சீட் கவர் தயாரிக்கும் மையம் ஆகிய தொழில் துவங்க இரண்டு பேருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டது.

'ரிசர்வ் சைட்'டில் கட்டடம்: செட்டிபாளையம் ஊராட்சியை சேர்ந்த சிலர் அளித்த மனு: அங்கேரிபாளையம், வெங்கமேடு பகுதியில் உள்ள திருப்பூர் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் 63 சென்ட் 'ரிசர்வ் சைட்' உள்ளது. இதில், ஆரம்ப சுகாதார மையம் அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டது; அதன் பின், அகற்றப்பட்டு விட்டது. அங்கு தற்போது தனியார் பள்ளி கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டிய கட்டடத்துக்கு வரி விதிப்பும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அந்த இடத்தில் ஆரம்ப சுகாதார மையம் அமைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவுடன் கைகளில் 'அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடு' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மனுப்பெறும் இடத்துக்கு மக்கள் வந்தனர். அதைப்பார்த்த டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். அவர்களிடம் இருந்த அட்டைகளை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.முட்டை அழுகல்: வடக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரசார் அளித்த மனுவில், 'பெருமாநல்லூர் பகுதியில் அங்கன்வாடி மையங்களுக்கு வரும் முட்டைகள் அழுகியுள்ளன. மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஊத்துக்குளி ஒன்றிய கவுன்சிலர் சின்னசாமி அளித்த மனுவில், 'காடம்பாளையம் - குட்டைக்காட்டு புதூர் தார் ரோடு மோசமாக உள்ளது. ஆவராங்காட்டுப்புதூர் ஆழ்குழாய் கிணற்றில்ஏர்-கம்ப்ரசர் மோட்டாருக்குப் பதிலாக சர்மெர்சபிள் மோட்டார் பொருத்த வேண்டும்,' என கோரியுள்ளார்.* செங்கப்பள்ளி, பிடாரப்பம்பாளையம் பொதுமக்கள் அளித்த மனுவில், 'தங்கள் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும்,' என கோரியுள்ளனர்.* திருப்பூர் பூம்புகார் நகர் மேற்கு பகுதியினர் அளித்த மனுவில், 'கடந்த 2004 முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. குட்டை போல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதில், சாயக்கழிவும் தேங்கியுள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத்துறை தடையாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.* வேலம்பாளையம் நகராட்சி கவுன்சிலர் நடராஜன் அளித்த மனுவில், 'மூன்றாவது திட்ட குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. பல பகுதிகளில் 13 நாட்களுக்கு பின்பே குடிநீர் சப்ளையாகிறது. கூடுதல் தொட்டி, கூடுதல் குடிநீர் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலை நீடித்தால் மக்களை திரட்டி மறியல் நடத்தப்படும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.* சாமளாபுரம் பகுதியினர் அளித்த மனுவில், 'பள்ளபாளையம் ராஜவாய்க்கால் பகுதியில் 25 ஆண்டுகளாக குடியிருக்கும் 19 குடும்பத்தினர், முறையாக வீட்டு வரி செலுத்தி, மின் இணைப்பு பெற்றுள்ளோம். எங்களுக்கு குடியிருக்கும் இடத்துக்கு உரிய பட்டா வழங்க வேண்டும்,' என்று கேட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us