/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தி : அரசு ஒப்புதல் அளித்தால் சிக்கலாகும்மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தி : அரசு ஒப்புதல் அளித்தால் சிக்கலாகும்
மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தி : அரசு ஒப்புதல் அளித்தால் சிக்கலாகும்
மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தி : அரசு ஒப்புதல் அளித்தால் சிக்கலாகும்
மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீட்டில் கடும் அதிருப்தி : அரசு ஒப்புதல் அளித்தால் சிக்கலாகும்
ADDED : செப் 08, 2011 01:52 AM
கோவை : கோவை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 100 வார்டுகளை ஒதுக்கீடு செய்வதில் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக பரவலாக அதிருப்தி கிளம்பியுள்ளது.
கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு, 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி கிராம ஊராட்சி ஆகியவை,கோவை நகரில் இணைக்கப்பட்டுள்ளன. புதிதாக இணைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, 100 வார்டுகள் உருவாக்கப்பட்டு, அவற்றின் எல்லையும் வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 கணக்கெடுப்பின் படி, 9 லட்சத்து 30 ஆயிரத்து 127 ஆக இருந்த, கோவை மாநகராட்சி மக்கள்தொகை, விரிவாக்கத்துக்குப் பின் 12 லட்சத்து 51 ஆயிரத்து 321 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பில் இது 20 சதவீதம் வரை உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில், புறநகரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும். இருப்பினும், தற்போதுள்ள மாநகராட்சிப் பகுதியில்தான் மக்கள் நெருக்கம் அதிகம். ஆனால், 9 லட்சத்து 30 ஆயிரத்து 127 பேருக்கு 60 வார்டுகளும், 3 லட்சத்து 21 ஆயிரத்து 191 பேருக்கு 40 வார்டுகளும் பிரிக்கப்படுவதாக ம.தி.மு.க., குற்றம் சாட்டியது. இந்த குளறுபடியே இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த தகவல் பரவி, கோவை நகரம் மற்றும் புறநகரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தரப்பினரையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் 30 வார்டுகள், பெண்கள் பொதுப்பிரிவினருக்கும், 10 வார்டுகள் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. பெண்கள் வார்டு?: 1,2,6, 13,15,16,17,18, 20,22,23,34, 38,40, 50,53,65,66,67,71,72,73,75,77,78, 88, 89, 90, 91 மற்றும் 99 ஆகிய 30 வார்டுகள், பெண்கள் பொதுப்பிரிவினருக்கும், 21,26,27,30,31, 63,70,87,93,95 ஆகிய 10 வார்டுகள், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதில் 4 வார்டுகள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இட ஒதுக்கீட்டுக்கு அரசு ஒப்புதல் அளிக்குமா, இதில் ஏதாவது மாற்றங்கள் செய்யுமா என்று இன்னும் தெரியாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக, இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை தாழ்த்தப்பட்டோர் வார்டாக மாற்றியிருப்பதாக அதிருப்தி எழுந் துள்ளது. தற்போதுள்ள 39,40 ஆகிய 2 வார்டுகளும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இவ்விரு வார்டுகளையும் சேர்த்து ஒரு வார்டாக்கப்பட்டுள்ளது. குனியமுத்தூரில் இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் 3 வார்டுகளைச் சேர்த்து ஒரு வார்டாக்கியுள்ளனர்; இந்த வார்டையும், குறிச்சியில் 16 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்களைக் கொண்ட வார்டையும் தாழ்த்தப்பட்டோர்க்கு ஒதுக்கியுள்ளனர். இதனால், அதிருப்தி நிலவுகிறது. குனியமுத்தூர் நகராட்சியில் இருந்த 14 வார்டுகள், 7 வார்டுகளாக்கப்பட்டு, அவற்றில் 6 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு வார்டும், தாழ்த்தப்பட்டோர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சிகளை உள்ளடக்கிய வார்டுகளும் அதிகளவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள அரசியல்கட்சியினர் மத்தியிலும் அதிருப்தி உள்ளது. மாநகராட்சியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு ஆதரவாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.எனவே, வார்டு ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்கும்முன்பாக, அங்குள்ள மக்களின் கருத்துகளை அறிய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், இதுவே ஆளும்கட்சிக்கு எதிரான அலையாகத் திரும்பும் வாய்ப்பு அதிகம்.


