ADDED : அக் 12, 2011 11:29 PM
தர்மபுரி : 'தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண் வங்கி துவங்கிட வேண்டும்' என உலக கண் பார்வை தினத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வியாழன் உலக பார்வை தினமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு முறையான சிகிச்சை எடுத்து கொள்ளவதன் மூலம் பார்வை இழப்பையும், பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்வதன் அவசியத்தை உணர்த்தவே உலக கண் பார்வை தினம் உருவாக்கப்பட்டுள்ளது.கண் பார்வை குறித்து மக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினத்தை சுகாதார அமைப்பு கண் பார்வை தினமாக அறிவித்துள்ளது. பார்வை இழப்பு பற்றிய முறையான விழிப்புணர்வு இல்லையெனில் வரும் 2020ம் ஆண்டுக்குள் உலகில் ஏறத்தாழ 8 கோடி பேர் பார்வையற்றவர்களாக இருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் 32.5 கோடி பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இவர்களில் 4.5 கோடி பேர் முழுமையாக பார்வை இழந்தவர்கள். 13 கோடி பேருக்கு பார்வை திறன் குறைபாடு உள்ளது. 15 கோடி பேர் கண்ணாடி அணிய துவங்கினால் பார்வை குறைபாட்டில் இருந்து மீள முடியும். பார்வை குறைபாடு உடையவர்கள் ஏறத்தாழ 90 சதவீதம் பேர் இந்தியா போன்ற வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். மாறும் வாழ்க்கை முறை, வயதானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது போன்றவற்றால் பார்வை குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.உலகில் பார்வை இழந்தவர்களின் 80 சதவீதம் பேர் 50 வயதை கடந்தவர்கள். முதியவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள கண் பார்வை குறைபாடு தடையாக உள்ளது. கண் பார்வை இழப்பை 75 சதவீதம் தடுக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வு குறைவாக உள்ளது. கண் தானம் செய்வது குறித்த தயக்கங்கள் பார்வையற்றோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.இது குறித்து தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆண், பெண், குழந்தைகள், வயதானவர்கள் என வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். கண்ணாடி அணிந்தவர்களும், கண் அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண் தானம் செய்யலாம். இறந்தவர்களின் உடலில் இருந்து ஒரு மணி நேரத்துக்குள் கண்கள் எடுக்கப்பட வேண்டும். எனவே கண் தானம் செய்ய விரும்பும் உறவினர்கள் உடனடியாக கண் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.டாக்டர்கள் வரும் வரையில் கண்கள் தரத்தை பாதுகாக்க இறந்தவர்களின் கண்கள் மேல் ஈரமான பஞ்சு அல்லது துணியால் மூடி வைக்க வேண்டும். இறந்தவர்களின் உடலுக்கு மேலாக ஃபேன் ஓடாமல் பார்த்து கொள்ள வேண்டும். தர்மபுரி நகரில் கண் தானம் செய்வோர் பலரும் முன் வரும் நிலையில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கண் வங்கி துவங்கிட வேண்டும்.கண்களை தானமாக எடுக்க தர்மபுரியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு டாக்டர்கள் மற்றும் தனியார் டாக்டர்கள் முன் வரவேண்டும். நமது உறவினர்கள் இறந்தால், அவர்கள் கண்களை தானமாக பெற நாம் ஊக்கியாக செயல்பட வேண்டும். கண் தானம் குறித்த முக்கியத்துவத்தை எடுத்து சொல்ல வேண்டும். கண் தானம் செய்வதால், ஒருவர் இறந்த பின்னரும் அவரது கண்கள் இருவரின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கிறது என்பதை உணர்ந்து அனைவரும் கண் தானம் செய்ய முன் வரவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


