Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அரசின் திட்டங்கள் கிராம மக்களை சென்றடைய வேண்டும்: அமைச்சர் விருப்பம்

அரசின் திட்டங்கள் கிராம மக்களை சென்றடைய வேண்டும்: அமைச்சர் விருப்பம்

அரசின் திட்டங்கள் கிராம மக்களை சென்றடைய வேண்டும்: அமைச்சர் விருப்பம்

அரசின் திட்டங்கள் கிராம மக்களை சென்றடைய வேண்டும்: அமைச்சர் விருப்பம்

ADDED : ஆக 03, 2011 01:24 AM


Google News

திருவள்ளூர் : அரசின் திட்டங்கள் அனைத்தும், கடைக்கோடி கிராம மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என, வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த் துறை அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம், வருவாய் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ரமணா, சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, வருவாய்த் துறை முதன்மைச் செயலர் ராஜகோபால், நில நிர்வாக ஆணையர் ஸ்வரண்சிங், நில அளவைத் துறை ஆணையர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி வரவேற்றார்.



கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்த எளிய முறையில் பட்டா மாறுதல் பெறும் திட்டத்தின்கீழ், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, புதிய பட்டா வழங்குவது, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அமைச்சர் தங்கமணி பேசும் போது,''வரும் காலங்களில் மக்களின் கோரிக்கையை தீர்க்க செயல்களில் வேகம் காட்ட வேண்டும். முதல்வர் அறிவித்த பட்டா மாறுதல் பெறுவதற்கு எளிமையாக்கப்பட்ட திட்டத்தின்கீழ் பட்டா மாறுதல் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலகங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். உண்மையான பயனாளிகளுக்கு, அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி கிராம மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அனைத்து திட்டங்களும் செயல்படுத்துவதில் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் வகிக்கும் நிலை உருவாக வேண்டும்,'' என்றார்.



அமைச்சர் ரமணா பேசும் போது, ''வருவாய் துறை என்பது ஆட்சியின் ஆணிவேர். முதல்வர் அறிவித்த திட்டங்களை பொறுப்புடன் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஏழை மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். திருவள்ளூரில் பஸ் நிலையம், அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இடம் ஒதுக்கித் தர தேவையான நடவடிக்கைகளை வருவாய்த் துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) பிருத்விராஜ், திருவள்ளூர் சார் ஆட்சியர் சித்திரசேனன், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் விசாகன் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us