ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரைவில் விரிவுபடுத்த வேண்டும் : பிரதமர் மன்மோகன் வலியுறுத்தல்
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரைவில் விரிவுபடுத்த வேண்டும் : பிரதமர் மன்மோகன் வலியுறுத்தல்
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரைவில் விரிவுபடுத்த வேண்டும் : பிரதமர் மன்மோகன் வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2011 11:45 PM

நியூயார்க்: 'சமகால யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலை மிக விரைவில் விரிவுபடுத்த வேண்டும். பல்வேறு தடைகளை உருவாக்கும் பொருளாதார மந்தத்தை உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது' என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில், இந்தாண்டுக்கான பொதுச் சபை கூட்டம் நடந்து வருகிறது. இதில், கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் நேற்று, 15 நிமிடங்கள் சபையில் உரையாற்றினார். அப்போது கூறியதாவது: ஏழை, பணக்கார நாடுகள், சிறிய, பெரிய நாடுகள் என, அனைத்தின் விருப்பங்களையும் உணர்ந்து கொள்ளும் அமைப்பாக ஐ.நா., இருக்க வேண்டும். அதற்கு ஐ.நா.,வும், அதன் முக்கிய உறுப்புகளான பொதுச்சபை மற்றும் பாதுகாப்புக் கவுன்சிலும், மாற்றியமைக்கப்பட வேண்டும். சமகால யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக ஐ.நா., இருக்க வேண்டும் என்றால், இந்த மாற்றங்கள் அவசியம் தேவை. இதன் மூலம் உலகப் பிரச்னைகளில் கவுன்சில் மீதான நம்பகத்தன்மை மற்றும் கவுன்சிலின் திறன் விரிவடையும். அதனால், பாதுகாப்புக் கவுன்சிலை மிக விரைவில் மாற்றியமைக்க வேண்டும். உலக பொருளாதாரத்திற்கும், நிதிநிலை தன்மைக்கும் அடிப்படையாக உள்ள அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகள், பொருளாதார மந்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. இந்த மந்தம், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். அந்நாடுகள் ஏற்கனவே விலைவாசி மற்றும் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நாடுகளுக்கிடையில் தடைகளை ஏற்படுத்தக் கூடிய, மக்கள் போக்குவரத்தை தடுக்கக் கூடிய, தடையற்ற வர்த்தகத்தை முடக்கக் கூடிய பொருளாதார மந்தத்தை உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது. உலக நாடுகள், ஆப்ரிக்கா மீது குறிப்பிடத்தக்க கவனம் செலுத்த வேண்டும். அந்நாட்டின் செல்வங்களான மக்களுக்கு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதன் மூலம், அதிகாரம் அளிக்க வேண்டும். வளரும் நாடுகளுக்கு அமைதியான சூழல் தேவை. அதனால், பயங்கரவாதத்திற்கு எதிராக தயங்காமல் நாம் போரிட வேண்டும். குறிப்பிட்ட வழிமுறைகள் அல்லது குறிப்பிட்ட உட்கட்டமைப்பு மூலம் தான் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நம்மால் சாத்தியமான அனைத்து வழிகள் மூலமும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.


