ADDED : ஜூலை 27, 2011 01:27 AM
நாமக்கல்: நாமக்கல் அருகே ரேஷன் பொருள் ஏற்றி வந்த லாரி மீது, திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில், மூன்று பெண்கள் உட்பட, 16 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று மாலை 6 மணியளவில், திருச்சிக்கு ராமஜெயம் என்ற தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. நாமக்கல் அருகே வேப்பனம் என்ற இடத்தில் சென்றபோது, முன்னால் சென்ற மணல் லாரியை ஓவர் டேக் செய்ய முயன்றுள்ளது.அப்போது, எதிரே ரேஷன் கடைகளுக்கு பொருள் சப்ளை செய்யும் லாரி வந்துள்ளது. அந்த லாரியின் மீது பஸ் மோதாமல் இருக்க, பஸ்ஸை டிரைவர் இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது, பஸ்ஸின் பின்புறம், லாரியின் முன்புறத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. விபத்தில், பஸ்ஸில் பயணித்த பொன்னி (43), சரஸ்வதி (34), பரிமளா (31) ஆகிய மூன்று பெண்கள் உட்பட, 16 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும், நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த லாரி டிரைவர் சந்திரசேகரன்(34) மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.