ADDED : ஜூலை 29, 2011 10:16 AM

சென்னை: காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில், பிரான்ஸ் நாட்டின் உணவுத் திருவிழா மற்றும் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
பல்கலைக்கழகத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். பதிவாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா, கருத்தரங்கை துவக்கி வைத்து பேசும்போது,'' தமிழகத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் நவீனமயமாக்கப்படுகின்றன. எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் சார்பிலும், விடுதிகள் செயல்படுகின்றன. ''வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், விடுதிகளில் எந்தவிதமான வசதிகளை எதிர்பார்க்கின்றனர் என்பதை, எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்துடன் ஆலோசித்து, அவர்கள் விரும்பும் வசதிகளை, தமிழ்நாடு சுற்றுலா விடுதிகளில், ஏற்படுத்த உள்ளோம். கோவில்கள் நிறைந்த நகரங்களில், சுற்றுலாத் துறை சார்பில், ஓட்டல்கள் அமைக்கப்படும்,'' என்றார்.
எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத் தலைவர் ரவி பேசும்போது,'' நம் நாட்டினர், சிகிச்சைக்காக, ஒரு காலத்தில், வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது. தற்போது, வெளிநாட்டினர் சிகிச்சைப் பெற, இந்தியா வருகின்றனர். அவர்கள் எதிர்பார்க்கும் வகையில், நவீன வசதிகளுடன் சிகிச்சையளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் சார்பில், காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், திருச்சி பகுதியில், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உள்ளன. இவை வெளிநாட்டுப் பயணிகளுக்கு பயனுள்ளவையாக உள்ளன,'' என்றார்.
விழாவில், தாஜ் ஓட்டல் கேட்டரிங் டெக்னாலஜி இயக்குனர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு, உணவு வகைகள் தயாரிப்பு முறை, அச்சிடப்பட்ட கையேடு வழங்கப்பட்டது.


