எழுத்தாளர்களை காப்பாற்ற வேண்டியது சமூகத்தின் கடமை: திருப்பூர் கிருஷ்ணன்
எழுத்தாளர்களை காப்பாற்ற வேண்டியது சமூகத்தின் கடமை: திருப்பூர் கிருஷ்ணன்
எழுத்தாளர்களை காப்பாற்ற வேண்டியது சமூகத்தின் கடமை: திருப்பூர் கிருஷ்ணன்
UPDATED : செப் 06, 2011 10:13 AM
ADDED : செப் 05, 2011 06:12 PM

சென்னை: 'எழுத்தாளர்களைக் காப்பாற்ற வேண்டும்.
அது, தமிழ்ச் சமூகத்தின் கடமை. அப்போது தான், தமிழ் இலக்கியம் செழிக்கும்'' என்று, அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார். மறைந்த எழுத்தாளர் நா.பார்த்தசாரதி நடத்திய, 'தீபம்' இதழில் இணையாசிரியராகப் பணியாற்றிய, திருமலைக்கு நிதி வழங்கும் விழா, சென்னையிலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது. இவ்விழாவில், விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் வேலாயுதம் வரவேற்புரை ஆற்றினார்.
தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் நடராஜன், நிதி வழங்கிப் பாராட்டிப் பேசினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சிறப்புரையாற்றினார். இதில், திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது: எழுபதுகளில் இலக்கியப் பத்திரிகை நடத்துவது, மிகவும் சிரமமான காரியம். லாபத்தை ஈட்டுவதை விட, நஷ்டத்தை எப்படிக் குறைப்பது என்பதே பத்திரிகை நடத்துபவர்களின் கவலையாக இருந்தது. அந்தச் சூழலிலும், 'தீபம்' பத்திரிகை தன்னுடைய இலக்கியக் கொள்கையிலிருந்து பிறழவில்லை. தீபத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், இருப்பதற்கு இடத்தையும், உணவையும் வழங்கி, மாதம் 90 ரூபாய், சன்மானமாக வழங்கினார்கள். அதை நான் மறுத்த போதும், நான் நூல் வாங்கிப் படிக்க வழங்கினார்கள். அந்தக் காலகட்டத்தில், பல எழுத்தாளர்கள் வறுமையில் இருந்ததை, நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன், இலக்கியக் கூட்டம் முடிந்து, வீட்டிற்கு வருவதற்கு 15 பைசா கூட இல்லாமல் கஷ்டப்பட்டதை, என்னிடம் அவரே பல முறை சொல்லி இருக்கிறார். எழுத்தாளன் வறுமையில் இருந்தால் தான், அவனுடைய எழுத்தில் உயிர்ப்பு இருக்கும் என்பது, சமூகத்தின் குற்ற உணர்ச்சிக்குக் கொடுக்கக் கூடிய ஒத்தடம். சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என நினைக்கிற எழுத்தாளனுக்கு, தனிப்பட்ட வாழ்வு இருக்கிறது. அதற்குப் பொருளாதாரம் மிக முக்கியம். பகுத்தறிவின் படி பார்க்கப் போனால், எந்தச் சாமியும் எழுத்தாளனுக்கு கூரையைப் பொத்துக் கொண்டு பணம் கொடுக்காது. எனவே, சமூகம் தான் எழுத்தாளர்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு, இந்த விழா அடிப்படையாக அமைந்திருக்கிறது. இது தொடர வேண்டும். இவ்வாறு, திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.
விழாவில், 'தீபம்' திருமலை, 2 லட்ச ரூபாய் நிதியும், பொன்னாடையும் பெற்றுக் கொண்டு ஏற்புரை நிகழ்த்தினார். 'திசை எட்டும்' ஆசிரியர் குறிஞ்சி வேலன் நன்றியுரையாற்றினார். குடந்தை கீதப்பிரியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.


