ADDED : செப் 16, 2011 12:26 AM
தர்மபுரி: சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இயங்கிவந்த சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இன்று முதல் சென்னை அண்ணாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் எளிதாகவும் குறித்த நேரத்திலும் பாஸ்போர்ட் பெற சென்னையில் தாம்பரம், அமைந்தகரை மற்றும் சாலிகிராமம் ஆகிய மூன்று இடங்களில் பாஸ்போர்ட் சேவை கேந்திரங்கள் இன்று (16ம் தேதி) முதல் தொடங்கப்படவுள்ளது. இக்கேந்திரங்களில் விண்ணப்பிக்க (www.passportindia.gov.in) என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை-6, நுங்கம்பாக்கம், சாஸ்திரிபவனில் இயங்கிவந்த சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இன்று முதல் பழைய எண் 785, புதிய எண் 158, ரையலா டவர்ஸ், டவர்ஸ் 2,3 மற்றும் 4வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் பாஸ்போர்ட் பிரிவில் 19ம் தேதி முதல் புதிய விண்ணப்ப படிவம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இப்படிவத்தை ( www.passportindia.gov.in ) என்ற வலையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் புதிய பாஸ்போர்ட் வேண்டி முதல் முறை விண்ணப்பம் செய்வோர் விண்ணப்பம் மட்டுமே கலெக்டர் அலுவலகத்தில் ஏற்றுகொள்ளப்படும். புதுப்பித்தலுக்கு விண்ணப்பங்கள், தக்கால் விண்ணப்பம் மற்றும் 60 பக்கம் கொண்ட பாஸ்போர்ட் பெறுவது முதலியவற்றுக்கு இணையத் தளத்தில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகருக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


