Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நேர்மையான உள்ளாட்சி நிர்வாகத்தை ம.தி.மு.க.வால் மட்டுமே தர முடியும் : மாவட்ட செயலாளர் சரவணன் நம்பிக்க

நேர்மையான உள்ளாட்சி நிர்வாகத்தை ம.தி.மு.க.வால் மட்டுமே தர முடியும் : மாவட்ட செயலாளர் சரவணன் நம்பிக்க

நேர்மையான உள்ளாட்சி நிர்வாகத்தை ம.தி.மு.க.வால் மட்டுமே தர முடியும் : மாவட்ட செயலாளர் சரவணன் நம்பிக்க

நேர்மையான உள்ளாட்சி நிர்வாகத்தை ம.தி.மு.க.வால் மட்டுமே தர முடியும் : மாவட்ட செயலாளர் சரவணன் நம்பிக்க

ADDED : அக் 07, 2011 02:17 AM


Google News

தென்காசி : 'நேர்மையான உள்ளாட்சி நிர்வாகத்தை ம.தி.மு.க.வால் மட்டும் தான் தர முடியும்' என அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் கூறினார்.

கடந்த சட்டசபை தேர்தலை புறக்கணிப்பு செய்த ம.தி.மு.க.உள்ளாட்சி தேர்தலை தனித்தே சந்திக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ம.தி.மு.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் ம.தி.மு.க.வெற்றி குறித்து கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவர். இன்றைய அரசியல் சூழ்நிலையில் நேர்மைக்கு சொந்தக்காரராக வைகோ விளங்குகிறார். அவர் வழி வந்துள்ள நாங்களும் நேர்மைக்கு இலக்கணமாக விளங்குகிறோம். எங்களின் வேட்பாளர்களை வாக்காளர்கள் வெற்றி பெற செய்தால் நேர்மையான உள்ளாட்சி நிர்வாகத்தை வழங்குவோம். இது ம.தி.மு.க.வால் மட்டுமே முடியும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும்.



அரசியல் என்பது ஆயிரமாயிரம் கோடிகளை கொள்ளை அடிக்கின்ற வேட்டை காடாக மாறிவிட்ட இக்காலத்தில் 48 ஆண்டு கால பொது வாழ்வில் ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நெறி சார்ந்த, அறம் சார்ந்த அரசியல் நடத்தி வருபவர் வைகோ. அவர் பார்லி.,யில் 24 ஆண்டு காலம் பணியாற்றி உரிமைக்குரல் முழங்கி தமிழனின் பெருமைக்கு உலக அரங்கில் மதிப்பை பெற்று தந்தார். இந்திய நதிகள் அனைத்தையும் தேசியமயமாக்கிடவும், முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைத்திடவும் கோரி தனிநபர் மசோதா தாக்கல் செய்து வாதாடிய ஒரேயொரு எம்.பி.யாக இருந்தவர் வைகோ.



செய்யாத குற்றத்திற்காக மூன்று தமிழ் இளைஞர்களை தூக்கு கயிறு இறுக்கிடும் நிலை வந்தபோது அவர்களை பாதுகாத்திட துடிக்கும் உயிர் காவலனாக வைகோ திகழ்கிறார். தமிழகத்தின் மேன்மைக்காவும், உரிமைக்காகவும், போராட்டங்கள் நடத்தி 28 முறை சிறைவாசம் ஏற்று தம் வாழ்வின் 4 ஆண்டு காலத்தை சிறையில் கழித்த ஒரே திராவிட இயக்க தலைவர் வைகோ தான்.



பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல், கிடைத்த சிறு துரும்பு போன்ற வாய்ப்பினையும் பயன்படுத்தி தமிழ் இனத்துக்காக போராடி வரும் வைகோ வின் அன்பு கண்மணிகளாக உள்ளாட்சி தேர்தல் களத்தில் நிற்கின்ற ம.தி.மு.க.வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.



நேர்மை வழயில் நடக்கின்ற தலைவரான வைகோ கரங்களை பலப்படுத்துங்கள். அரசியல் உலகை தூய்மை நிறைந்ததாக மாற்றிட உங்கள் பங்களிப்பை செய்யுங்கள். தமிழக அரசியலில் புதியதொரு பொன்னேடு படைத்திட துணிந்து முடிவு எடுங்கள். நல்ல தீர்ப்பு தாருங்கள். நீங்கள் போடும் ஓட்டு உள்ளாட்சியில் நேர்மையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கட்டும். தமிழ் இனத்தின் உரிமை வாழ்வுக்காக போராடும் வைகோ வின் கரங்களை வலுப்படுத்தட்டும். வருங்கால தமிழகம் வளம் பெறட்டும். ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம் அமைந்திட பம்பரம் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் சரவணன் கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us