சுகர் 500 இருக்கு! கொழுப்பு 300 இருக்கு : நீதிபதியிடம் புலம்பிய உடன்பிறப்பு
சுகர் 500 இருக்கு! கொழுப்பு 300 இருக்கு : நீதிபதியிடம் புலம்பிய உடன்பிறப்பு
சுகர் 500 இருக்கு! கொழுப்பு 300 இருக்கு : நீதிபதியிடம் புலம்பிய உடன்பிறப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, சிவனாண்டி - பாப்பா நில அபகரிப்பு வழக்கில் விசாரணைக்காக, கடந்த 19ல் ஆஜரான தி.மு.க., நகர செயலர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், திருமங்கலம் ஒன்றிய சேர்மன் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் நகர் செயலர் கிருஷ்ணபாண்டியனை, இரவில் கைது செய்வதாக போலீஸ் அறிவித்தது.
வேனில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை பின்தொடர்ந்து, கட்சியினரும், மாஜிஸ்திரேட் குடியிருப்பில் குவிந்தனர். வேனில் அமர வைக்கப்பட்ட நால்வரையும், உடன் பிறப்புகள் சந்தித்து ஆறுதல் கூறினர். முதிய தொண்டர் ஒருவர் உற்சாக பானம் தந்த உற்சாகத்தில், ''போய் வா தலைவா போய் வா,'' என தளபதியை பார்த்து கூற, அதிர்ச்சியில் இருந்த உடன்பிறப்புகள், ஒரு கணம் குலுங்கி சிரித்தனர்.
வேனுக்குள் இருந்த தளபதியும் கூட சிரித்ததுடன், வெளியில் உள்ளவர்களை பார்த்து, 'முன்ஜாமின் எடுங்கப்பா!' என, யோசனை தெரிவித்தார். பின், மாஜிஸ்திரேட் முத்துக்குமார் முன் நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டனர். என்ன வழக்குன்னு தெரியாது? என நால்வரும் கூற, முதல் தகவல் அறிக்கையை கால் மணி நேரம் மாஜிஸ்திரேட் படித்தார்.
அவர்களை ரிமாண்ட் செய்வதாக மாஜிஸ்திரேட் கூற, மதுரை சிறையில் அடைக்கும்படி, நால்வரும் கேட்டுக் கொண்டனர். அதன்படி, மாஜிஸ்திரேட்டும் உத்தரவிட்டார். அப்போது தொண்டரின் மொபைல் போனில், 'எனக்கும் இடமுண்டு...' என்ற பாடல் ஒலிக்க, 'அதை முதலில் அணையப்பா' என, வழக்கறிஞர்கள் சத்தமிட்டனர்.
பின், நால்வரும் ஒவ்வொருவராக உடல்நல பாதிப்பு குறித்து நீதிபதியிடம் விளக்கினர். தளபதியோ, ''முதுகெலும்பு தேய்மானம். ஒரு வாரத்திற்கு முன் வரை மருத்துவமனையில் இருந்தேன். நடக்க சிரமமாக இருக்கு. சுகரும் இருக்கு,'' என்றார்.
பொட்டு சுரேஷ், ''கழுத்து தேய்மானம். அல்சர் இருக்கு. செஸ்ட் பெயினும் உள்ளது. எட்டு மணி நேரம் விசாரித்ததில் மனஉளைச்சல் இருக்கு,'' என்றார்.
கொடி சந்திரசேகர், ''லோ பிரஷர், சுகர்'' என்றார் சுருக்கமாக. நீங்க சொல்லுங்க என கட்சியினர் கூற, கிருஷ்ணபாண்டியன், ''சுகர் 500 இருக்கு, கொழுப்பு 300 இருக்கு,'' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் சிரித்து விட்டனர். அவர்களை உடனடியாக போலீசார் வேனில் ஏற்றி அமர வைத்தனர். ஆனால், அவர்களது அங்க அடையாளங்களை பார்க்க வேண்டும் என மாஜிஸ்திரேட் கூற, மீண்டும் அவர்களை அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.
நால்வருக்காக, வழக்கறிஞர்கள் மோகன்குமார், குபேந்திரன், ரவி உட்பட பலர், சிறையில் முதல் வகுப்பு, சிகிச்சை மற்றும் ஜாமின் கோரி மனு செய்தனர். பிறகு ஒரு வழியாக நால்வரையும் வேனில் ஏற்றி மதுரை சிறைக்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு அடைக்க முடியாது, எனக்கூறி முன்கூட்டியே தங்கள், 'பிளான்'படி பாளையங்கோட்டைக்கு கொண்டு சென்றனர்.


