ரூ.4.50 லட்சம் கடனுக்காக வீடு அபகரிப்பு: வி.கே.குருசாமி மீது வழக்கு
ரூ.4.50 லட்சம் கடனுக்காக வீடு அபகரிப்பு: வி.கே.குருசாமி மீது வழக்கு
ரூ.4.50 லட்சம் கடனுக்காக வீடு அபகரிப்பு: வி.கே.குருசாமி மீது வழக்கு
UPDATED : செப் 09, 2011 10:17 PM
ADDED : செப் 09, 2011 09:46 PM

மதுரை : மதுரையில் 4.50 லட்ச ரூபாய் கடன் வாங்கிய நகை தயாரிப்பாளரின் வீட்டை அபகரித்ததாக, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி (தி.மு.க., ) உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதியப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை காமராஜர் ரோடு பச்சரிசிக்கார தோப்பைச் சேர்ந்த நகை தயாரிப்பாளர் மகேந்திரன், 47. அதே பகுதியை சேர்ந்த ராஜாவிடம் தங்கம் வாங்கி, நகை செய்து வந்தார். இதன்படி ராஜாவுக்கு, 4.50 லட்ச ரூபாய் மகேந்திரன் தர வேண்டியிருந்தது.இதற்காக சில மாதங்களுக்கு முன், அவரை கடத்தி, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு, ராஜா கூட்டாளிகள் அழைத்துச் சென்றனர். அங்கு வி.கே.குருசாமி முன்னிலையில், காமராஜர் ரோடு தங்கம் நகரில் உள்ள மகேந்திரன் வீட்டை, மிரட்டி எழுதி வாங்கினர். பின், போலி ஆவணம் தயாரித்து எஸ்.ஆர்.கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு வீட்டை, ராஜா பதிவு செய்து கொடுத்தார்.ராஜா, வி.கே.குருசாமி, குமார், சுரேஷ்குமார், இளங்கோவன், பத்திர எழுத்தர் சங்கராச்சாரி, மாவட்ட பதிவாளர் அண்ணாமலை (தற்போது திருச்சி டி.ஐ.ஜி.,), கோபாலகிருஷ்ணன் மற்றும் சிலர் மீது, மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனிடம், மகேந்திரன் புகார் கொடுத்தார்.342 (அடைத்து வைத்தல்), 365 (ஆள் கடத்தல்), 387 (கொடுங்காயம் ஏற்படும் என மிரட்டுதல்), 465 (பொய்யான ஆவணம் தயாரித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, ராஜா மற்றும் குமார் கைது செய்யப்பட்டனர். வி.கே.குருசாமி, ஏற்கனவே இட ஆக்கிரமிப்பு உட்பட வழக்குகளில், குண்டர் சட்டத்தில் கைதாகி, பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.


