Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அக்கம் பக்கம்/அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

PUBLISHED ON : செப் 18, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

கிரண் பேடி தேர்தலுக்கு ரெடியா?



டில்லி மாநிலத்தில், ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தான், சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.

காங்கிரசிடம் இருந்து டில்லியை கைப்பற்ற, பா.ஜ., மேலிட தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவுமே பயன் அளிக்கவில்லை. இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த, பா.ஜ., தலைவர்களுக்கு, அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம், பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரேயின் போராட்டத்துக்கு, டில்லி மக்கள் தான் அதிக அளவில் ஆதரவு தந்தனர். ஹசாரே குழுவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி, டில்லி மக்களுக்கு ஏற்கனவே, நன்கு பரிச்சயம் ஆனவர். இதனால், இவரை வைத்து தேர்தலில் காங்கிரசை முறியடிக்க, பா.ஜ., மேலிட தலைவர்கள், அதிரடி திட்டம் தீட்டியுள்ளனர். வரும், 2013ல் நடக்கவுள்ள தேர்தலில், கிரண் பேடியை, வடக்கு டில்லி தொகுதியில், காங்கிரசுக்கு எதிராக, பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகள், வேகமாக நடந்து வருகின்றன. 'இந்த தொகுதியில், காங்கிரஸ் சார்பில், எவ்வளவு செல்வாக்கு நிறைந்த வேட்பாளர்களை நிறுத்தினாலும், கிரண் பேடியை எதிர்த்து, அவர்களால் வெற்றி பெற முடியாது' என்பது, பா.ஜ., தலைவர்களின் நம்பிக்கை. 'தேர்தலில் நிற்க, கிரண் பேடி சம்மதிப்பாரா?' என்பது தான், தற்போது பா.ஜ., தலைவர்களுக்கு உள்ள ஒரே ஒரு சந்தேகம். 'கிரண் பேடி சம்மதித்து விட்டால், அப்புறம் டில்லி எங்கள் கைவசம் வந்து விடும்' என, கொக்கரிக்கின்றனர் பா.ஜ., தலைவர்கள்!



சேட்டனுக்கு இது தேவையா?



கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தடாலடியாக எதையாவது அறிவித்து விட்டு, பின்னர், ஏன் தான் இப்படி அறிவித்தோமோ என, தலையைச் சொறிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இதுபோல் மீண்டும் ஒரு அனுபவம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக, முதல்வர் அலுவலகத்தில், இனிமேல், 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும் என, அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, பல தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்தது. இதைப் பார்த்த முதல்வர், பெருமையுடன், தன் சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொண்டார். தன் அமைச்சரவையில் உள்ளவர்களிடம், 'என் திட்டங்களுக்கு, மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது பார்த்தீர்களா'என, பெருமையடிக்கவும், அவர் தவறவில்லை. உதவி மையம் திறக்கப்பட்டதும், அங்குள்ள தொலைபேசிக்கு அழைப்புகள் வரத் துவங்கின; பொதுமக்கள், தங்கள் குறைகளை தெரிவித்தனர். அடுத்த சில நாட்களில், முதல்வரை பாராட்டியும், திட்டியும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகளை எப்படி சமாளிப்பது என, தெரியாமல் அங்கிருந்த ஊழியர்கள் திணறிப் போயினர். ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தால், அதுவும், சம்பந்தமே இல்லாமல், முதல்வரை பாராட்டியும், விமர்சித்தும் அழைப்புகள் வந்தால், பாவம் அவர்கள் என்ன செய்வர். இந்த பிரச்னையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். ஊழியர்கள் கூறியதை கேட்டதும், உம்மன் சாண்டியின் முகம் தொங்கிப் போய் விட்டது. 'உதவி மையத்தை மூடி விடலாமா' என, தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார், சாண்டி சேட்டன்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us