ADDED : அக் 08, 2011 01:31 AM
ஈரோடு : ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா நேற்று
நடந்தது. இக்கோவிலில், புரட்டாசி பெருந்திருவிழா செப்டம்பர் 30ம் தேதி
துவங்கியது. அக்டோபர் 1ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை யாஹ சாலை
பூஜை, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நேற்று காலை, கோவில் திருத்தேர்
அலங்கரிக்கப்பட்டு, கஸ்தூரி அரங்கநாதர் ஸ்வாமி திருவீதி உலா வந்தார். ஈரோடு
அறநிலையத்துறை உதவி ஆணையர் தனபால், கோட்டை பெருமாள் கோவில் செயல் அலுவலர்
ரவி ஆகியோர், வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவக்கிவைத்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். கோட்டை பெருமாள்
கோவிலில் துவங்கி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர் செல்வம்
பார்க், காமராஜர் வீதி வழியாக திருவீதி உலா வந்து, மாலையில் கோவில் நிலையை
அடைந்தது. வழியெங்கும் பொதுமக்கள் திரளாக திரண்டிருந்து திருத்தேரில்
ஸ்வாமியை தரிசித்து சென்றனர்.
மதியர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கடைசி நாளான வரும் 10ம் தேதி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
மற்றும் வடமாலை சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.


