/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசியல் கட்சிகளை கலக்கும் சனி மூலை "சென்டிமென்ட்'அரசியல் கட்சிகளை கலக்கும் சனி மூலை "சென்டிமென்ட்'
அரசியல் கட்சிகளை கலக்கும் சனி மூலை "சென்டிமென்ட்'
அரசியல் கட்சிகளை கலக்கும் சனி மூலை "சென்டிமென்ட்'
அரசியல் கட்சிகளை கலக்கும் சனி மூலை "சென்டிமென்ட்'
ADDED : செப் 30, 2011 01:56 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசியல் கட்சிகளை 'சனி மூலை' சென்டிமென்ட் ஆட்டிப்
படைக்கிறது. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சனி மூலை
'சென்டிமென்ட்' அரசியல் கட்சிகளைக் கலக்கியது. வடகிழக்கில் அமைந்துள்ள
மூலையே சனி மூலை என அழைக்கப்படுகிறது. புதுச்சேரி பகுதியின் வடகிழக்கில்
அமைந்துள்ள காலாப்பட்டில் இருந்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது
பிரசாரத்தைத் துவக்கினர். சனி மூலையில் இருந்து, எந்தக் காரியத்தைத்
துவக்கினாலும் வெற்றிக் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். புதுச்சேரி
மாவட்ட அளவில் இருந்த சனி மூலை 'சென்டிமென்ட்டை', தொகுதி அளவிற்கு கொண்டு
சென்ற பெருமை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தியலிங்கத்தைச் சாரும்.
தொகுதிகள் மறுசீரமைப்பில் புதிதாக உருவான, காமராஜர் நகர் தொகுதியின் சனி
மூலையில் அமைந்துள்ள சாமிபிள்ளைத்தோட்டம் லெனின் நகரில் இருந்து தனது
பிரசாரத்தை வைத்திலிங்கம் துவக்கியது குறிப்பிடத்தக்கது. சனி மூலையில்
அமைந்துள்ள தொகுதியான காலாப்பட்டில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும்
என சட்டசபையில் ருசிகர விவாதமும் நடந்தது. சனி மூலை தொகுதியில் வெற்றி
பெற்றதாலேயே, கல்யாணசுந்தரத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக கூறியதும்
சபையில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திரா நகர்
இடைத் தேர்தலிலும் சனி மூலையை அரசியல் கட்சிகள் மறக்கவில்லை.
இத்தொகுதியில் உள்ள ஞானதியாகு நகரில் இருந்து அ.தி.மு.க., வேட்பாளர்
சுத்துக்கேணி பாஸ்கரன் ஓட்டு வேட்டையைத் துவக்கினார். தொகுதியின்
வடகிழக்கில் சனி மூலையில் ஞானதியாகு நகர் அமைந்துள்ளதாக கூறி, இங்கிருந்து
அ.தி.மு.க.,வினர் பிரசாரத்தைத் துவக்கினர். ஆன்மிகம், ஜோதிடம், வாஸ்து,
'சென்டிமென்ட்' போன்றவற்றுக்கு பெயர் பெற்ற என்.ஆர். காங்., கட்சியை
மட்டும்'சனி மூலை' விட்டு வைக்குமா... இந்திரா நகர் தொகுதியின் 'சனி மூலை'
எந்தப் பகுதி என்பது தொடர்பாக என்.ஆர். காங்., கட்சியினர், 'காம்ப்பஸ்
வைத்து அளக்காத' குறையாக, கடந்த சில நாட்களாக அலசி ஆராய்ந்தனர். தொகுதி
'மேப்'பை கம்ப்யூட்டரில் 'பிரிண்ட் அவுட்' போட்டு, வடகிழக்கில் அமைந்துள்ள
பகுதியைத் துல்லியமாக கணக்கிட்டனர். ஜிப்மர் வளாகத்தில் உள்ள சஞ்சீவி
விநாயகர் கோவிலுக்கு வடக்கு பக்கத்தில் செல்லும் 400 மீட்டர் நீளமுள்ள
சின்னஞ்சிறிய தெருவே, சனி மூலை என்பதை ஒருவழியாக கண்டுபிடித்து
உற்சாகமடைந்தனர்.
இந்தத் தெருவில் உள்ள வீடுகளில் நேற்று மாலை 8.30 மணியளவில் என்.ஆர்.
காங்கிரசார் ஓட்டு கேட்டு, பிரசாரத்தைத் துவக்கியது குறிப்பிடத்தக்கது.


