Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் முதன்முறையாக 2 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

புதுச்சேரியில் முதன்முறையாக 2 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

புதுச்சேரியில் முதன்முறையாக 2 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

புதுச்சேரியில் முதன்முறையாக 2 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

ADDED : அக் 08, 2011 12:21 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரியில் முதன்முறையாக பிறந்து இரண்டு மாதமேயான பெண் குழந்தைக்கு, இதய அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.ஜிப்மர் மருத்துவமனைக்கு, மிகவும் ஆபத்தான நிலையில் பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தையை பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அக்குழந்தைக்கு இதய துடிப்பும், சுவாசமும் மோசமாக இருந்தது.இதில் கன்ஜெனியல் கம்ப்ளீட் ஹார்ட் பிளாக் மற்றும் பிடிஏ கோளாறுகளால் செயல்திறனை இழந்த குழந்தையின் இதயம் நிமிடத்திற்கு 40 முறை மட்டுமே துடித்து கொண்டிருந்தது.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை காப்பாற்றும் பொறுப்பை, ஜிப்மர் இதய அறுவை சிகிச்சை குழுவினர் சவாலாக ஏற்றனர். இதய துடிப்பும், ரத்த அழுத்தமும் தொடந்து குறைந்து வருவதை கண்காணித்த டாக்டர்கள், குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை கூடத்தில், குழந்தையின் இதய துடிப்பை சீராக்க, குழந்தையின் காலிலுள்ள ரத்தக்குழாய் வழியாக மின்கம்பியை செலுத்தி பேட்டரியுடன் இணைத்து, படிப்படியாக இதய துடிப்பை கொண்டு வந்தனர்.

பிறகு நிரந்தர பேஸ்மேக்கர் எனும் மின்கருவியை குழந்தையின் வயிற்றுச் சுவரில் பொருத்தி, அதிலிருந்து வரும் மின்கம்பியை மார்பு கூட்டில் நுழைத்து இதயத்தின் இடப்புற சுவரில் பொருத்தினர். அதே சமயம், இடப்புற இதய அறையிலிருந்து வெளியேறும் சுத்த ரத்தமும், வலப்புற அறையில் இருந்து வெளியேறும் அசுத்த ரத்தமும், இயற்கைக்கு மாறாக கலக்கும் குழாயான பி.டி.ஏ, எனப்படும் பாதையை துண்டித்து சரி செய்தனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் குழந்தை தற்போது உடல்நிலை தேறிவருகிறது. இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளது.பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக கூட முடிந்து விடும். இருப்பினும் குழந்தையின் அபாய நிலையை கருத்தில் கொண்டு, ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதன்முறையாகும். சுமார் ஒன்றரை லட்சம் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சை, முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜிப்மர் இயக்குனர் சுப்பாராவ், டாக்டர் சாய்சந்திரன் தலைமையிலான இதய அறுவை சிகிச்சை பிரிவும், பேராசிரியர் பாலசந்தர், டாக்டர்கள் சதீஷ் சந்தோஷ், ராஜா ஜெய்சுந்தர் செல்வராஜ் தலைமையிலான இதயவியல் பிரிவும், பேராசிரியர் அசோக்படே தலைமையிலான மயக்க மருத்துவ பிரிவும் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us