/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாதுகாப்பு கருதி கோவை எஸ்.பி.,யின் அறை மூடல்பாதுகாப்பு கருதி கோவை எஸ்.பி.,யின் அறை மூடல்
பாதுகாப்பு கருதி கோவை எஸ்.பி.,யின் அறை மூடல்
பாதுகாப்பு கருதி கோவை எஸ்.பி.,யின் அறை மூடல்
பாதுகாப்பு கருதி கோவை எஸ்.பி.,யின் அறை மூடல்
ADDED : அக் 12, 2011 02:54 AM
கோவை : வக்கீல்களின் முற்றுகை போராட்டம் காரணமாக, கோவை மாவட்ட எஸ்.பி.,யின்
அறை பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி எஸ்.பி.,யின் அறையே பூட்டப்பட்ட சம்பவம், கோவையில் இதுவரை
நடந்திராத நிகழ்வாகும்.கோவை, துடியலூரைச் சேர்ந்தவர் அனந்தீஸ்வரன்;
வக்கீல். சிவில் வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த 7ம் தேதி துடியலூர் போலீஸ்
ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கு போலீசாருடன் ஏற்பட்ட
வாக்குவாதத்தின் போது வக்கீல் ஆனந்தீஸ்வரன் தாக்கப்பட்டார்.
நூற்றுக்கணக்கான வக்கீல்கள் துடியலூர் போலீஸ் ஸ்டேஷனை அன்று இரவே
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, எஸ்.ஐ.,ரேணுகாதேவி
உள்ளிட்ட ஐந்து போலீசார் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட
சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட
போலீசார் கைது செய்யப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த வக்கீல்கள், கோவை
ஸ்டேட் பாங்க் ரோட்டிலுள்ள, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தை நேற்று முன் தினம்
முற்றுகையிட்டனர். மாவட்ட கலெக்டர் கருணாகரன், தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி.,
வன்னியபெருமாள், மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி உள்ளிட்ட அதிகாரிகள்
வக்கீல்களுடன் பேச்சு நடத்தினர். 'தாக்குதலில் ஈடுபட்ட போலீசாரை கைது
செய்தே ஆக வேண்டும்' என்ற கோரிக்கையில் வக்கீல்கள் பிடிவாதமாக இருந்ததால்,
பேச்சு தோல்வியில் முடிந்தது. நேற்று முன் தினம் தொடங்கிய போராட்டம்
நேற்றும் தொடர்ந்தது.எஸ்.பி., ஆபீஸ் மூடல்: நூற்றுக்கணக்கான வக்கீல்கள்
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்ததால்
இரண்டாம் நாளாக எஸ்.பி.,யின் அறை நேற்றும் பூட்டப்பட்டிருந்தது. வக்கீல்கள்
உள்ளே நுழைந்து ஆபீசை ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கையில்
அலுவலக அறை பூட்டப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எஸ்.பி.,
உமா உள்ளிட்ட அதிகாரிகள் கீழ் தளத்திலுள்ள மற்றொரு அறையில் அமர்ந்து
வக்கீல்களின் போராட்ட நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர். கோவை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு
காண புகார் மனு அளிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோவை மாவட்ட போலீஸ் வரலாற்றில் பாதுகாப்பு கருதி எஸ்.பி.,யின் அறையே
பூட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்கின்றனர், போலீசார்.
மில் தொழிலாளர் போனஸ் பேச்சு துவக்கம்
கோவை : கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், மில் தொழிலாளர் போனஸ்
பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, மில்
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் தொடர்பாக, ஒரு மாதம் முன்னரே
தொழிற்சங்கத்தினர் சார்பில் அந்தந்த மில்களுக்கு கடிதம் அனுப்பி
வைக்கப்பட்டது.தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், மில்
அதிபர்களுக்கும், தென்னிந்திய மில்கள் சங்கத்தினருக்கும் அனுப்பி
வைக்கப்பட்ட அந்த கடிதத்தில், '6,600 கதிர்கள் வரை இயங்கும் மில்களில்
பணிபுரியும் நிரந்தரம், பதிலி, தற்காலிகம், தினக்கூலி, கேம்ப் கூலி என
அனைத்து வகை தொழிலாளர்களுக்கும், அவர்கள் ஈட்டிய சம்பளத்தில் 35 சதவீதம்
போனஸ் வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தனர்.'கோரிக்கை தொடர்பாக, அக்.,5ம்
தேதிக்குள் தொழிற்சங்கங்களுடன் பேசி, போனஸ் பட்டுவாடா செய்ய வேண்டும்'
என்றும், 'அக்.,5க்குள் உடன்பாடு காண முடியாத மில்களில்,
நேரடிப்போராட்டங்களில் ஈடுபடுவது குறித்து கூட்டுக்குழு கூடி முடிவு
செய்யும்' என்றும் கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.அதன் அடிப்படையில்,
பெரும்பாலான மில்களில், நிர்வாகத்தினர், தொழிற்சங்கத்தினர் இடையே போனஸ்
பேச்சு துவங்கியுள்ளது. மில் அதிபர்கள் தரப்பில், 'நூல் விலை
குறிப்பிடும்படியாக உயரவில்லை. பஞ்சு விலை ஏறி இறங்குவதால் பெரும் நஷ்டம்
ஏற்படுகிறது. மின் தட்டுப்பாடு பிரச்னையும் மில்களின் லாபத்தை கடுமையாக
பாதிக்கிறது' என்று, தெரிவித்தனர்.தொழிற்சங்கத்தினர் தரப்பில், 'கடந்த
போனஸ் ஆண்டில், ஓரிரு மாதங்கள் மட்டும் தான் மின் தட்டுப்பாடு இருந்தது.
ஒன்பது முதல் பத்து மாதங்கள் வரை, மின் வினியோகம் நல்ல நிலையில் தான்
இருந்தது. அந்த காலகட்டத்தில் மில்கள் நல்ல லாபம் சம்பாதித்துள்ளன.
அதற்கேற்ப போனஸ் வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.'பேச்சுவார்த்தை
தொடர்ந்து நடந்து வருகிறது. தீபாவளிக்குள் பெரும்பாலான மில்களில் உடன்பாடு
ஏற்பட வாய்ப்புள்ளது' என்று, தொழிற்சங்க நிர்வாகிகள் நம்பிக்கை
தெரிவித்தனர்.இதேபோல, தேசிய பஞ்சாலை கழகத்துக்கு (என்.டி.சி.,) சொந்தமான
ஏழு மில்களில் வேலை பார்க்கும் 4,000 தொழிலாளர்களுக்கான போனஸ்
பேச்சுவார்த்தையும் துவங்கியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நான்கு
தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும், என்.டி.சி., அதிகாரிகளும் முதல் கட்ட
பேச்சு நடத்தியுள்ளனர்.


