சந்திரபாபு நாயுடுவின் கவனம் இப்போது தேசிய அரசியலில்
சந்திரபாபு நாயுடுவின் கவனம் இப்போது தேசிய அரசியலில்
சந்திரபாபு நாயுடுவின் கவனம் இப்போது தேசிய அரசியலில்
ADDED : ஆக 11, 2011 12:17 AM
ஐதராபாத் : ஆந்திராவில், தெலுங்கானா பிரச்னை அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து வருவதால், அம்மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பின், அம்மாநிலத்தில் பதட்டமான சூழ்நிலையே தொடருகிறது. தெலுங்கானா பிரச்னையை மையமாக வைத்து, அரசியல் கட்சிகள் அவ்வப்போது, பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. இருப்பினும், இந்த விவகாரத்தில் இறுதியான முடிவை எட்ட முடியாமல், மத்திய அரசு திணறி வருகிறது. இந்தச் சூழலில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, டில்லி அரசியலில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். தேசிய அளவில், முக்கியத் தலைவராகத் திகழ வேண்டும் என்கிற நோக்கில், அவர் காய் நகர்த்தி வருவதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி கட்டட ஊழல் மற்றும் '2 ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் என்ற, மூன்று முக்கிய ஊழலில் சிக்கி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திணறி வருகிறது.இந்தச் சூழலில், ஊழலுக்கு எதிராக, சந்திரபாபு நாயுடு குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார். அவரது திட்டங்களுக்கு, வடிவம் கொடுக்கும் வகையில், இரண்டு நாள் பயணமாக, நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றார். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று, சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். அதுபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன், ராஷ்டிரிய லோக் தள கட்சியின் தலைவர் அஜித் சிங், மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் ஆகியோர், சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்திய மற்ற பிரபலங்கள். டில்லியில், இரண்டு நாள் தங்கும் சந்திரபாபு நாயுடுவின் முக்கியத் திட்டம், விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளையும், அதிகரித்து வரும் லஞ்ச ஊழலையும் எதிர்க்கும், ஒத்த மனதுடைய அரசியல் தலைவர்களை, அவர் சந்தித்துப் பேசுகிறார். லோக்பால் மசோதா சட்ட வரையறையில், பிரதமரையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நாயுடு, விவசாயத் துறையின் மேம்பாட்டிற்கென சாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை, மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், தெரிவித்து வருகிறார். வெளி நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தையும், மத்திய அரசு திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும் என, தெரிவித்து வரும் நாயுடுவை, சமீபத்தில், யோகா குரு ராம்தேவ், ஐதராபாத்தில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்தவரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முக்கிய நபராகத் திகழ்ந்தார். இந்நிலையில், தற்போது,பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ள, மத்திய அரசின் பலவீனமான போக்கு, அவரை மீண்டும் தேசிய அரசியலில் ஈடுபட வைத்துள்ளது என்பதே, அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.


