Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஆந்திரா முழுவதும் செல்ல சுற்றுப்பயணம் கிரண்குமார் திட்டம் : மக்கள் மத்தியில் பிரபலமாக பல கோடி செலவு

ஆந்திரா முழுவதும் செல்ல சுற்றுப்பயணம் கிரண்குமார் திட்டம் : மக்கள் மத்தியில் பிரபலமாக பல கோடி செலவு

ஆந்திரா முழுவதும் செல்ல சுற்றுப்பயணம் கிரண்குமார் திட்டம் : மக்கள் மத்தியில் பிரபலமாக பல கோடி செலவு

ஆந்திரா முழுவதும் செல்ல சுற்றுப்பயணம் கிரண்குமார் திட்டம் : மக்கள் மத்தியில் பிரபலமாக பல கோடி செலவு

ADDED : ஆக 20, 2011 10:25 PM


Google News
Latest Tamil News

ஐதராபாத் : ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநிலம் முழுவதும் நேரடியாக சுற்றுப்பயணம் செய்து, நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்க முடிவு செய்துள்ளார்.

அதன் மூலம், மக்கள் மத்தியில், தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வராக பதவி வகித்த ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பின்னர், 70 வயதைக் கடந்த ரோசய்யா முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர், முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரண் குமார் ரெட்டி ஆந்திர முதல்வராக, கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றது முதல், தெலுங்கானா போராட்டம், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியவற்றை சமாளிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது.

இதனிடையே, ஒரு தனியார் தொலைக்காட்சி எடுத்த கருத்துக்கணிப்பில், அதிகம் விளம்பரம் இல்லாத 20 மாநில முதல்வர்கள் பட்டியலில் கிரண்குமார் ரெட்டியும் உள்ளதாக கூறியது. கடுமையாக உழைத்தும், தனக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லையே என வருத்தமுற்ற கிரண்குமார், 100 கோடி ரூபாய் செலவில் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, ஆந்திராவின் முக்கிய நகரங்களில், போக்குவரத்து அதிகமுள்ள இடங்களில், தன்னுடைய பிரமாண்ட கட்-அவுட்டுகளை வைக்கவும், மாநிலம் முழுவதும், தமது தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களைப் பற்றி, தன் படத்துடன், சுவர் விளம்பரங்கள் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

கட்-அவுட்டுகளுக்காக 27 கோடியும், சுவர் விளம்பரங்களுக்கு 70 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை போன்று, நடமாடும் மருத்துவமனைகளை தன்னுடைய படத்துடன் அமைக்கவும் கிரண் குமார் முடிவு செய்துள்ளார்.

மேலும், மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை, தானே நேரடியாக சென்று துவங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம், மக்களை நேரடியாக சந்திப்பதுடன், தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக்கொள்ளவும் முடியும் என அவர் நம்புவதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us