/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23ல் மாநில அளவில் கண்டன பேரணிலோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23ல் மாநில அளவில் கண்டன பேரணி
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23ல் மாநில அளவில் கண்டன பேரணி
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23ல் மாநில அளவில் கண்டன பேரணி
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 23ல் மாநில அளவில் கண்டன பேரணி
ADDED : ஆக 21, 2011 01:33 AM
நாகர்கோவில் : வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும், தேர்தல்
சீர்திருத்தம் கொண்டு வரவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23ம்
தேதி மாநில அளவில் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம் ஆகியன நடக்கிறது என
நாகர்கோவிலில் இந்தியகம்யூ., தேசிய செயலாளர் டி.ராஜா., எம்.பி., கூறினார்.
பூதப்பாண்டியில் நடைபெறும் ஜீவா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த
இந்திய கம்யூ., தேசிய செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான டி.ராஜா
நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது;- நாடு விடுதலைக்கு பிறகு ஊழல்கள்
காங்., ஆட்சியில் அதிகமாக நடந்து உள்ளது.
2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ்
குடியிருப்பு, விண்வெளி எஸ்.பாண்ட் ஊழல் என காங்., ஆட்சி காலத்தில்
ஊழலுக்கு அளவே இல்லாமல் நடந்துள்ளது.
மிகபெரிய ஊழல்கள் லட்சக்கணக்கில், கோடி கணக்கில் மலிந்து விட்டது. நாட்டு
மக்களின் வருமானம், மக்கள்வருமானம் பலரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொந்தளிப்பு நிலவுகிறது. இதன் வெளிப்பாடே அன்னாஹசாரே
நடத்தும் போராட்டம். இந்திய கம்யூ., மற்றும் இடதுசாரி கட்சிகள், பல்வேறு
கட்சிகள் இது குறித்து பார்லியிலும், வெளியிலும் குரல் எழுப்பி வருகின்றன.
காங்., அரசு கொண்டு வரும் சட்ட மசோதா போதுமான வலுவான சட்டமாக கருதமுடியாது
என கட்சி கருதுவதால், வலுவான மசோதா வேண்டும் என அரசை வலியுறுத்தி
வருகிறோம். சட்ட வரம்பிற்குள் பிரதமரும் வரவேண்டும் என விரும்புகிறோம்.
லோக்பால் சட்டம் கொண்டு வரும்போது, நீதிதுறையிலும் சட்டம் கொண்டு
வரவேண்டும் என கருதுகிறோம். தேசிய அளவிலான ஜுடீசியல் கமிஷன் அமைக்கவேண்டும்
என கருதுகிறோம். இதனை வலியுறுத்தியும், தேர்தல் முறையாக நடைபெறவேண்டும்.
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது, பண ஆதிக்கம் இருக்ககூடாது,
தேர்தல் முறையாக நடத்த சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பதை
வலியுறுத்தியும், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புபணம்
கையகப்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் நடந்த ஒத்த
கருத்துடைய கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வரும் 23ம்
தேதி அகில இந்திய அளவில் அ.தி.மு.க., உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் இணைந்து
மாநில, மாவட்ட தலை நகரங்களில், கன்டன இயக்கமாக கன்டன பேரணி, ஆர்ப்பாட்டம்
நடக்கிறது.
ஊழலுக்கு எதிரான இந்த இயக்க ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் அரசு செவி
சாய்க்கவில்லையெனில், டெல்லியில் மீண்டும் கூடி மிகபெரிய போராட்டம்
நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இலங்கை போரில்
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அங்கு நடந்தது இனபடுகொலை எனவும்,
மனித உரிமை மீறல் எனவும் ஐக்கியநாட்டு சபை குழுவினர் கூறியுள்ளனர்.
சமீபகாலத்தில் இதுபோன்ற மனித உரிமை மீறல் குற்றம் எந்த நாட்டிலும்
நடந்ததில்லை. 2-வது உலக யுத்தத்தின் போது கூட சாட்சியோடு நடந்தது. ஆனா,
இலங்கையில் சாட்சியில்லாமல் நடந்துள்ளது. ஆனாலும் தொழில்நுட்ப வளர்ச்சியால்
படம் எடுக்கப்பட்டு தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. மனித உரிமை
மீறல் நடந்துள்ளது என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. இந்த விஷயத்தை பொது
விசாரணைக்கு உள்படுத்தவேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்திவருகிறது.
இதன் அடிப்படையில் இலங்கையில் அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதை
வலியுறுத்தி, தற்போத பார்லி., கூட்டத்தொடரில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்,
வரும் 24ம் தேதி பார்லி.,யில் நடைபெறும். இது சம்பந்தமான விஷயத்தில் இலங்கை
பிரச்னையில் இந்தியாவின் நிலை என்ன என்பது குறித்தும், பகிரங்கமாக விசாரணை
நடத்த ஏன் காங்., அரசு தயங்குகிறது என்பதை விளக்கம் அளிக்கவேண்டும் என்பது
குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றே வழி
என்பது எங்கள் கருத்தாகும்.
இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக, குமரி மாவட்ட மீனவர்கள் இலங்கை
கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்த
வேண்டுமெனில் கச்சதீவு உடன்பாட்டை மறுஆய்வு என்பதை விட்டுவிட்டு, கச்சதீவு
உடன்பாட்டை ரத்து செய்யவேண்டும். இது குறித்தும் பார்லியில்
வலியுறுத்துவோம். மத்தியில் ஆளும் காங்., அரசு பல்வேறு நிலைகளிலும் தோல்வி
அடைந்து விட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தமுடியவில்லை, பணவீக்கத்தை
கட்டுப்படுத்தவில்லை. பொருளாதார நெருக்கடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு,
வேலையில்லா திண்டாட்டம், வறுமை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தோல்வி
அடைந்துவிட்டது. இதனால் நாடு தழுவிய அளவில் பதட்டமான சூழ்நிலை
உருவாகியுள்ளது.
நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் என்ன செய்வது என புரியாமல் திணறி
வருகிறார். காங்., பா.ஜ., இரண்டு கட்சி ஆட்சி என்பது இந்தியாவில்
நடைமுறைக்கு ஏற்றதல்ல. காங்., பா.ஜ., அல்லாத மற்ற கட்சிகளுக்கும் வரலாற்று
அரசியல் பாத்திரம் உள்ளது. காங்., போன்று பா.ஜ., வும் ஊழல் குற்றசாட்டிற்கு
உள்ளாகி உள்ளது. கர்நாடாக மாநிலத்தில் ஏற்பட்ட மாற்றம் ஒன்று போதும்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் உள்ளவர்களுக்கு ஆயுள்தண்டனையை விட அதிகளவு
தண்டனை கிடைத்துள்ளது. இது குறித்து மாநில நிர்வாககுழுவினர் மாநில அரசின்
கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
தமிழகத்தில் நிதி பற்றாகுறையை போக்க மத்திய அரசு நிதி உதவி செய்யவேண்டும்
என முதல்வர் கேட்டுள்ளார். மத்தியஅரசு நிதி உதவி செய்திட வேண்டும் என்பது
பொதுவான கருத்து. தமிழக அரசின் செயல்பாடுகள் நன்கு அமைந்துள்ளது. இவ்வாறு
டி.ராஜா எம்.பி., கூறினார்.
பேட்டியின போது, மாவட்ட செயலாளர் சந்திரபாபு, மாநிலகுழு உறுப்பினர்
பெரும்படையார், மாவட்டகுழு உறுப்பினர் பொன்னுலிங்கஐயன், நெல்லை மாவட்ட
துணைசெயலாளர் சத்யன் ஆகியோர் உடன்இருந்தனர்.


