Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உள்ளூர் "டிவி' சேனல் தடை எதிரொலி:போலிகளிடம் ஏமாறாமல் மக்கள் நிம்மதி

உள்ளூர் "டிவி' சேனல் தடை எதிரொலி:போலிகளிடம் ஏமாறாமல் மக்கள் நிம்மதி

உள்ளூர் "டிவி' சேனல் தடை எதிரொலி:போலிகளிடம் ஏமாறாமல் மக்கள் நிம்மதி

உள்ளூர் "டிவி' சேனல் தடை எதிரொலி:போலிகளிடம் ஏமாறாமல் மக்கள் நிம்மதி

ADDED : ஆக 28, 2011 12:52 AM


Google News

தமிழகத்தில் உள்ளூர், 'டிவி' சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், போலி வியாபாரம் மற்றும் சேவைகளுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது; மக்கள் ஏமாறாமல் நிம்மதியாக உள்ளனர்.அரசு கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் புதுப்பிக்கப்பட்டு, கேபிள் ஆபரேட்டர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விரைவில், கேபிள் 'டிவி'க்கான கட்டணம் நிர்ணயம் செய்து சேவை துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கேபிள் 'டிவி' வருகையால், உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த உள்ளூர் 'டிவி' சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது.



மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உள்ளூர் 'டிவி' சேனல்கள் தடை செய்யப்பட்டன. பல மாவட்டங்களில் புற்றீசல் போல முளைத்து போட்டி போட்டு நடத்தி வந்த சேனல்கள் அடங்கிப் போகின. இந்த சேனல்கள் உள்ளூர் செய்திகள் என்ற பெயரில் நடக்காத சம்பவங்களை கூட நடந்தது போன்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியதோடு, ஏராளமான வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலம் நல்ல லாபம் பார்த்து வந்தன. இறப்பு செய்தி முதல் சாதாரண வீட்டு விசேஷங்களுக்கு கூட விளம்பரம் அல்லது அதற்கென பிரத்யேக நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பி வருமானம் பார்த்தன.



வருமான ஆசையால், பல போலி வியாபார நிறுவனங்களின் விளம்பரங்களும் இவற்றில் ஒளிபரப்பாகின. குறிப்பாக போலி சித்தா, ஓமியோபதி போன்ற சிகிச்சைகள், ஜோதிடம், மாந்திரீகம், ராசி கற்கள் போன்றவற்றின் பெயரை சொல்லி, பிரத்யேக நிகழ்ச்சி நடத்தி மக்களை ஏமாற்றியவர்கள் ஏராளம். இவர்களின் தொழிலுக்கு மூலாதாரமாக விளங்கியவை உள்ளூர் சேனல்கள். வருமானத்துக்கு உரிய கணக்கோ, வரியோ இவை செலுத்துவதில்லை.நேரடி ஒளிபரப்பு, பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை நம்பி, போலி நபர்களிடம் சிகிச்சைக்கோ, ஜோதிடத்துக்கோ செல்லும் மக்கள் கடன்காரர்கள் ஆனதுதான் மிச்சமானது. தற்போது, உள்ளூர் சேனல் தடையால், போலி வியாபாரிகள் மற்றும் சேவைகளுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. இதனால், மக்களும் ஏமாறாமல் நிம்மதியாக உள்ளனர். தொடர்ந்து இதே நிலையே நீடிக்க வேண்டும்.அரசு கேபிள் 'டிவி'யில் உள்ளூர் சேனல்களை சேர்க்க கூடாது.



அப்படியே சேர்த்தாலும் போலி சேவைகளை தடை செய்யும் விதத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூர் சேனல்களுக்கு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.குறிப்பாக உள்ளூர் சேனல்களில் செய்தி ஒளிபரப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. காரணம் பத்திரிகைகளில் செய்தி வெளியானால், அதை கண்காணிக்க பிரஸ் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உள்ளன. அதனால், பத்திரிகைகளில், மதகலவரத்தை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலோ செய்தி வெளியிடுவது இல்லை.ஆனால், உள்ளூர் சேனல்களை கட்டுப்படுத்த எந்த சட்டமும் இல்லை.



இவர்கள் ஒளிபரப்புவது தான் செய்தி என்ற நிலை உருவாகி உள்ளது. சாதாரணமாக ஒரு கிராம கோவில் திருவிழாவில் நடக்கும் சிறு சிறு சண்டைகளை கூட ஊதி பெரிதாக்குவதால், கிராமத்தில் இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்படும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் உள்ளூர் சேனல்களில் செய்தி ஒளிபரப்பு, நகரில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, செய்திகளை பிற பெயரில் ஒளிபரப்பு செய்வதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.- நமது சிறப்பு நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us