5,000 கி.மீ., சாலைகள் புதுப்பிப்பு
5,000 கி.மீ., சாலைகள் புதுப்பிப்பு
5,000 கி.மீ., சாலைகள் புதுப்பிப்பு

சென்னை : ''திட்டம் சாரா பணிகளின் கீழ், சாலை மற்றும் பாலப் பராமரிப்பிற்கு, 977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்கள் குறித்து, அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்: நடப்பாண்டில், சி.ஆர்.ஐ.டி.பி., திட்டத்தில், 1,900 கோடி ரூபாய் மதிப்பில், 1,667 கி.மீ., நீளத்திற்கு சாலைகள் அகலப்படுத்தப்படும். 3,675 கி.மீ., நீளத்திற்கு, சாலைகள் மேம்பாடு செய்யப்படும். 244 பாலங்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மாநில நெடுஞ்சாலைகள் இருவழித்தடமாகவும் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் இடை வழித்தடமாகவும் மேம்படுத்த, 529 கோடியில், 1,321 கி.மீ., நீளத்திற்கு, சாலைகள் அகலப்படுத்தப்படும். இத்துறையின் பயன்பாட்டில் உள்ள, புராதனமான பாரம்பரியமிக்க கட்டடங்கள் கண்டறியப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, வரலாற்றுத் தொன்மை பாதிக்கப்படாமல் பழுதுபார்க்கப்பட்டு, பாதுகாக்கப்படும்.
திட்டம் சாரா பணிகளின் கீழ், சாலை மற்றும் பாலப் பராமரிப்பிற்கு, 977 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியைப் பயன்படுத்தி, 5,000 கி.மீ., நீளத்திற்கு சாலைகள் புதுப்பிக்கப்படும். சென்னையில், அண்ணா சாலை சின்னமலை சர்ச் அருகில், ஈக்காடு தாங்கல் உள்வட்ட சாலையில், காசி தியேட்டர் அருகில், சென்னை புறநகர் பஸ் நிலையம் அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் எம்.கே.என் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படும்.
ஈ.வெ.ரா., சாலையில் பூங்கா நகர், சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றை இணைத்து, ஒரு உயர்மட்ட நடைபாதை பாலம், 39 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்டங்கள்:
* 40 கோடி ரூபாய் மதிப்பில், உள்வட்ட சாலையில், சென்னை புறநகர் பஸ் நிலையம், நகர்ப்புற பஸ் நுழைவு வாயில் மற்றும் காளியம்மன் கோவில் சாலை சந்திப்பில், மேம்பாலம் கட்டப்படும்.
* 20 கோடி ரூபாய் மதிப்பில், ஜி.என்.டி., சாலையில், புழல் மற்றும் உள்வட்ட சாலையில், ஆமுல்லைவாயில் பகுதியை இணைக்கும் வகையில், புதிய இணைப்புச் சாலை அமைக்கப்படும்.
* 25 கோடி ரூபாய் மதிப்பில், தாம்பரம் கிழக்கு புறவழிச் சாலையின் முதல் பகுதி, 4.கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
* 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைந்தகரை, சீமாவரம், குன்றத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளில், எட்டு இடங்களில், பாலங்கள் அமைக்கப்படும்.
* வேளச்சேரி விஜயநகரம் பஸ் நிலையம் அருகில், தரமணி சாலை மற்றும் தாம்பரம், வேளச்சேரி சாலை சந்திப்பில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்படும்.
*ஜி.எஸ்.டி., சாலையில், பல்லாவரம் பகுதியில், குன்றத்தூர் சாலை சந்திப்பு, சந்தை சாலை சந்திப்பில், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாலம் கட்டப்படும்.
*உள்வட்ட சாலையில், கொளத்தூர் பகுதியில், இரட்டை ஏரி அருகில், பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில், 50 கோடி ரூபாய் செலவில் ஓர் மேம்பாலம் கட்டப்படும். இவ்வாறு, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.


