PUBLISHED ON : செப் 05, 2011 12:00 AM

'புதுமையாக செய்தால் சாதிக்கலாம்!' கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் கீதாலட்சுமி: என் அம்மா, டாக்டர் கமலம், சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.
அதனால், இந்தத் துறை எனக்கு புதிதல்ல. அப்பா சேக்கிழார், சீனியர் வழக்கறிஞர். எனக்கு சின்ன வயதில் படிப்பு என்றாலே, வேப்பங்காய் மாதிரி தான். விளையாட்டு தான் அதிகம். எட்டாம் வகுப்பு வரை, நான், பள்ளியில் திட்டு வாங்காத நாட்களே இல்லை. ஒரு நாள், எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என்னை அழைத்து, பயங்கரமாக திட்டி அனுப்பி விட்டார். எனக்கு மிகவும் அவமானமாக போனது. அன்று தான் நல்லா படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன் பின், வெறித் தனமாக படித்து, பள்ளியில், முதல் மதிப்பெண் பெற்றேன். எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். கடந்த, 1974ல், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தேன். பின், எம்.டி., மைக்ரோபயாலஜி துறையை தேர்ந்தெடுத்தேன். அந்தத் துறைக்கு என்னென்ன தேவையோ, தேடித் தேடி கற்றுக் கொள்ள ஆரம்பிச்சேன். நிறைய பயிற்சி வகுப்புகள் நடத்தினேன். கருத்தரங்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சின்னு எங்க துறையை சிறப்பாக கொண்டு சென்றேன். அதன் வெளிப்பாடாக சென்னை, ஜி.எச்.,ல் துறைத் தலைவர் பொறுப்பில் என்னை நியமிச்சாங்க. இந்த ஆண்டு மார்ச் மாதம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டேன். ஏதாவது புதுமையாக செய்தால் தான், நம்மை நாம் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது!


