இந்திய ரஷ்ய உறவு என்றென்றும் நீடித்து வளரும்
இந்திய ரஷ்ய உறவு என்றென்றும் நீடித்து வளரும்
இந்திய ரஷ்ய உறவு என்றென்றும் நீடித்து வளரும்
ADDED : செப் 14, 2011 11:08 AM
சென்னை: 'இந்திய மக்களும், ரஷ்ய மக்களும் நட்புறவுக்காகவும், கலாசாரத்திற்காகவும் பாடுபட கூடியவர்கள்.
இந்த நட்புறவு என்றென்றும் நீடித்து வளரும்,'' என, பாரதியாரின் கொள்ளு பேரன் ராஜ்குமார் பாரதி பேசினார். இந்திய- ரஷ்யா நட்பு நாடாகி வரும் 2012ம் ஆண்டு 40 ஆண்டுகளை தொடுகிறது. இதை கொண்டாடும் வகையிலும், சிறந்த கவிஞர்களான சுப்ரமணிய பாரதியார் மற்றும் ரஷ்ய கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின் பிறந்த நாளை முன்னிட்டும், இந்திய- ரஷ்ய உறவை பிரதிபலிக்கும் வகையில், இந்திய- ரஷ்ய பெண்கள் சங்கம் மற்றும் இந்திய கலாசாரம் நட்பு கழகத்தின் சார்பில், ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், பழம் பெருமைகளை விளக்கும் வகையில் ஓவியர் மஞ்சுளா சட்ரத் வரைந்திருந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நம் நாட்டின் அரிய கட்டடக் கலையையும், ரஷ்ய நாட்டின் அரிய கட்டடக் கலையை விளக்கும் வகையில், சுதிர் சுப்ரமணி எடுத்திருந்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவைகள் இந்திய- ரஷ்ய நட்புறவு வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பாரதியாரின் கொள்ளு பேரன் ராஜ்குமார் பாரதி பேசியதாவது:
'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என எழுதி, சுதந்திரம் அடைவதற்கு முன்னே சுதந்திரம் பெற்றோம் என பாடினார். 'மகாகாளி கடைக்கண் காட்டி-னாள் ஆகா என்று எழுந்தது பார் யுகபுரட்சி' என்று ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ரஷ்ய மக்கள் புரட்சியில் ஈடுபட்டது பற்றி எழுதி, அதேபோல இந்திய மக்களும் சுதந்திரத்திற்கு போராட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாரதியார், புஸ்கின் இருவரும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள். அரசின் தவறுகளை பாரதியார் மாதிரியே அலெக்சாண்டர் புஸ்கினும் சுட்டி காட்டியவர். இந்திய மக்களும், ரஷ்ய மக்களும் நட்புறவுக்காகவும், கலாசாரத்திற்காகவும் பாடுபட கூடியவர்கள். இந்த நட்புறவு என்றென்றும் நீடித்து வளரும். இவ்வாறு ராஜ்குமார் பாரதி பேசினார்.
இறுதியில், பாரதியாரின் பாடல் வரிகளுக்கு, நடன கலைஞர் ஷில்பா சேதுராமன் பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடியில் நடனமாடினார்.