Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரக்கோணம் அருகே ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம்

அரக்கோணம் அருகே ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம்

அரக்கோணம் அருகே ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம்

அரக்கோணம் அருகே ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம்

UPDATED : செப் 16, 2011 12:47 AMADDED : செப் 15, 2011 11:53 PM


Google News
சென்னை:அரக்கோணம் அருகே நடந்த ரயில் விபத்து குறித்து, அரக்கோணம், சித்தேரி ரயில் நிலைய ஊழியர்கள், நேற்று சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் துறை ரீதியான முதல் கட்ட விசாரணை துவங்கியது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அரக்கோணம்-காட்பாடிக்கு பாசஞ்சர் ரயில், கடந்த 13ம் தேதி சித்தேரி ரயில் நிலையத்திற்குள் செல்வதற்காக, ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள சிக்னலில் நின்று கொண்டிருந்தது.

அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் மின்சார விரைவு ரயில், பாசஞ்சர் ரயிலின் பின்புறம் மோதியது. இச்சம்பவத்தில், 10 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.'விபத்திற்கு மனித தவறே காரணம். சிக்னலைக் கவனிக்காமல் வந்ததால் தான், இந்த விபத்து நடந்துள்ளது' என, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.



தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் கூறுகையில், 'சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால், அதற்கு முந்தைய சிக்னல்களில் மஞ்சள் அல்லது சிவக்கு விளக்கு தான் எரியும். ஆனால், இதனைக் கவனிக்காமல், டிரைவர், 90 கி.மீட்டர் வேகத்தில் ரயிலை ஓட்டியதால் தான், இந்த விபத்து நடந்துள்ளது' என்று கூறினார்.90 கி.மீட்டர் வேகம்விபத்து குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விபத்து நடந்த இடத்தில், 'ஸ்பீடு மீட்டர்' கருவி மீட்கப்பட்டுள்ளது. அதில், 90 கி.மீட்டர் வேகத்தைக் கடந்திருப்பதாகக் காட்டுகிறது. எனவே, ரயில் 90 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றது தெரிய வருகிறது' என்றார்.



ஊழியர்களிடம் விசாரணைரயில் விபத்து குறித்து முழு விசாரணை நடத்த, ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதல் கட்டமாக, ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை துவங்கியுள்ளது. அரக்கோணம், சித்தேரி ரயில் நிலையங்களில் உள்ள சிக்னல் பராமரிப்பு ஊழியர்கள், நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் உட்பட, 50 பேர் நேற்று சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம், துறை ரீதியான முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை மேலும் தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.



பாதுகாப்பு ஆணையர் விசாரணை:இதற்கிடையே, ரயில் விபத்து குறித்து, தென்மண்டல பாதுகாப்பு ஆணையர் மிட்டல், இன்று விசாரணை நடத்தவுள்ளார். சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தின் 5வது மாடியில், இன்று காலை 10 மணிக்குத் துவங்கும் விசாரணை, நாளை (17ம் தேதி) வரை நடக்கிறது.ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், விபத்து நடந்த ரயில்களில் பயணித்தவர்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை, பாதுகாப்பு ஆணையரிடம் நேரில் சந்தித்துக் கொடுக்கலாம்.

இந்த விசாரணை முடிவடைந்ததும், விசாரணை அறிக்கையைத் தயாரித்து, ரயில்வே அமைச்சகத்தில் வழங்குவர். அப்போது தான், விபத்தின் முழு விவரம் தெரிய வரும்.



ஓரிரு நாளில் போக்குவரத்து சீரடையும்:விபத்து நடந்ததால் சேதமடைந்த ரயில் தண்டவாளங்கள், தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து நடந்து வருகிறது. ரயில்கள், 15 முதல் 20 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதற்காக, ரயில் தண்டவாளத்தின் இருபுறமும், ஊழியர்கள் நிறுத்தப்பட்டு, ரயில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.சேதமடைந்த மின்கம்பம், அறுந்து விழுந்த மின் ஒயர், சிக்னல் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில், ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் ஓரிரு நாளில் முடிந்து விடும். அதன் பின்னர், வழக்கமான போக்குவரத்து துவங்கிவிடும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.



பெட்டிகள் அகற்றம்':இந்த விபத்தில், காட்பாடி பாசஞ்சர் ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகளும், கடற்கரை-வேலூர் மின்சார விரைவு ரயிலின் முதல் பெட்டி மட்டும் அதிகம் சேதமடைந்தன. பாசஞ்சர் ரயில் பெட்டிகள் அரக்கோணத்திற்கும், மின்சார விரைவு ரயிலின் கடைசி ஆறு பெட்டிகள் ஆவடிக்கும் கொண்டு செல்லப்பட்டன. சேதமடைந்த மூன்று பெட்டிகள் ரயில் தண்டவாளம் அருகில் உள்ளன. விரைவில், இவற்றை எடுத்துச் செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us