Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காங்., வேட்பாளரை கதிகலங்க செய்ய களமிறங்கியது ஹசாரே குழு

காங்., வேட்பாளரை கதிகலங்க செய்ய களமிறங்கியது ஹசாரே குழு

காங்., வேட்பாளரை கதிகலங்க செய்ய களமிறங்கியது ஹசாரே குழு

காங்., வேட்பாளரை கதிகலங்க செய்ய களமிறங்கியது ஹசாரே குழு

UPDATED : அக் 10, 2011 02:25 AMADDED : அக் 09, 2011 11:43 PM


Google News
Latest Tamil News
ஹிசார் :அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா இடைத்தேர்தலில், ஆளும் கட்சியின் ஊழல் குறித்து எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வரும் நிலையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் குழுவினரும் களம் இறங்கியுள்ளதால், காங்., கட்சியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அரியானா மாநில முன்னாள் முதல்வரும், அரியானா ஜன்ஹித் காங்., கட்சியின் நிறுவனருமான பஜன்லால் இறந்ததைத் தொடர்ந்து, ஹிசார் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது.

ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெய்பிரகாஷ், அரியானா ஜன்ஹித் காங்., சார்பில் பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னாய், முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகனும் தப்வாலி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அஜய் சிங் சவுதாலா, இந்திய தேசிய லோக்தள் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். இவர்களோடு சேர்த்து மொத்தம் 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.ஏற்கனவே மூன்று முறை எம்.பி.,யாக இருந்த ஜெய்பிரகாஷ் மீண்டும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இரண்டு வாரம் இந்த தொகுதியில் தங்கி, அவர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.



மத்தியில் ஆளும் காங்., கட்சியின் தொடர் ஊழல் குறித்து எதிர்க்கட்சியினர், காதை பிளக்கும் வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் போதாதென்று தற்போது ஹசாரே குழுவினரும் ஹிசார் தொகுதியில் முகாமிட்டு, காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்து வருகின்றனர்.'ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யாத காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, அன்னா ஹசாரே முழங்கும் பேச்சு அடங்கிய சி.டி.,யை வினியோகித்து, ஹசாரே ஆதரவாளர்கள் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஹசாரே குழுவில் உள்ள கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர், இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் சூறாவளி பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.இதனால், காங்கிரஸ் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஊழல் ஒழிப்பு போராட்டத்தின் மூலம் செல்வாக்கு பெற்றுள்ள ஹசாரேவின் பிரசார சி.டி.,யால், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தனது தந்தையின் செல்வாக்கை வைத்து எளிதில் வெற்றிக்கனியை பறிக்க முடியும் என நம்புகிறார், பஜன்லாலின் மகன் குல்தீப் பிஷ்னாய்.



பார்லிமென்டுக்கும் மேலானவர் ஹசாரே:பார்லிமென்டுக்கும் மேலானவர் அன்னா ஹசாரே என, அவரது குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.



'டிவி' சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிடுகையில், 'ஒவ்வொரு குடிமகனும் பார்லிமென்டுக்கும் மேலானவர்கள். 'பார்லிமென்டை விட குடிமகன் முக்கியமானவர்' என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இந்த வகையில் ஹசாரே, பார்லிமென்டுக்கும் மேலானவராகிறார். ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும் அதிகாரம் ஆளும் கட்சிக்கு உள்ளது.இதை செய்யாத காரணத்தால் தான், காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்கிறோம். இந்த கருத்தை ஆதரிக்கவில்லையென்றால், உத்தர பிரதேச மாநிலம் உள்ளிட்ட தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியையும் எதிர்த்து பிரசாரம் செய்வோம். காங்கிரஸ் கட்சி எங்கள் இயக்கத்தை ஒழிக்கப் பார்க்கிறது' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us