தயாநிதி, கலாநிதி வீடுகளில் ரெய்டு ஏமாற்றுவேலை: சி.பி.ஐ., நடவடிக்கை குறித்து ஜெயலலிதா பேட்டி
தயாநிதி, கலாநிதி வீடுகளில் ரெய்டு ஏமாற்றுவேலை: சி.பி.ஐ., நடவடிக்கை குறித்து ஜெயலலிதா பேட்டி
தயாநிதி, கலாநிதி வீடுகளில் ரெய்டு ஏமாற்றுவேலை: சி.பி.ஐ., நடவடிக்கை குறித்து ஜெயலலிதா பேட்டி

சென்னை:''கலாநிதி, தயாநிதி வீடுகளில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தியிருப்பது, மக்களை ஏமாற்ற நடந்த கண்துடைப்பு வேலை,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஏர்செல் நிறுவனத்திற்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது, ஏர்செல் பங்குகளை விற்க, சிவசங்கரனை நிர்பந்தித்தது தொடர்பாக, தயாநிதி மற்றும் கலாநிதி உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிந்துள்ளது.
சி.பி.ஐ.,யின் காலதாமதமான ரெய்டு குறித்து, முதல்வர் ஜெயலலிதாவிடம், நிருபர்கள் கேட்டதற்கு, அவர் அளித்த பதில்: மாறன் சகோதரர்கள் மற்றும் அவர்களது அலுவலகங்கள், நெருங்கியவர்களிடம் சி.பி.ஐ., நடத்திய ரெய்டு, மக்களை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட வெறும் கண்துடைப்பு செயல் போல உள்ளது. எனினும், இந்த ரெய்டுகள் மூலம், ஏதாவது வெளிவரும் என்று நம்புவோம். ஆனால், இது, மக்களை மோசடி செய்ய நடந்த ஒரு செயலாகவே தெரிகிறது.காரணம், இந்த ஊழல் குறித்து, மீடியாக்களில் முதலில் செய்தி வெளிவந்து, நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில், ஏராளமான உருப்படியான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.இந்த நான்கு ஆண்டுகள் இடைவெளியில், கலாநிதி, தயாநிதி சகோதரர்கள், தங்களது வீடுகள் அல்லது அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட ஆவணங்களை இன்னும் வைத்திருப்பர் என்பதை, கற்பனை செய்யவே முடியவில்லை. எனவே, இந்த ரெய்டுகளால் ஏதாவது வெளிவருகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.
தப்ப முடியாது
எப்படியானாலும், தயாநிதி, கலாநிதி மீதான சி.பி.ஐ.,யின் பிடி தளராது என்பதால், அடுத்தடுத்த விசாரணைகளில், பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


