/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கைவிட்ட பெற்றோருக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளி :கரையுமா கல் நெஞ்சம்?கைவிட்ட பெற்றோருக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளி :கரையுமா கல் நெஞ்சம்?
கைவிட்ட பெற்றோருக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளி :கரையுமா கல் நெஞ்சம்?
கைவிட்ட பெற்றோருக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளி :கரையுமா கல் நெஞ்சம்?
கைவிட்ட பெற்றோருக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளி :கரையுமா கல் நெஞ்சம்?
ADDED : ஆக 22, 2011 10:54 PM
கோவை : பெற்றோர், உறவினரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட சிறுவனை, தற்காலிகமாக காப்பகத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார், கோவை கலெக்டர்.
சிறுவனின் பெற்றோருக்கு போலீஸ் மூலம் கவுன்சிலிங் வழங்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மரப்பேட்டை வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி புஷ்பவதி (32). இவர்களுக்கு ராஜ்குமார் (13), கலைச்செல்வி (10) என இரு குழந்தைகள். பிறந்தது முதல் மூன்று வயதாகும் வரை ராஜ்குமார் உடல் நிலை, நன்றாகவே இருந்தது. மூன்று வயதுக்கு பிறகு கை, கால்கள் செயல் இழக்கத் தொடங்கின. ஒரு சில மாதங்களில், தானாக எந்த வேலையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டான், சிறுவன். சிகிச்சை அளித்தும் பயனில்லாத நிலை ஏற்பட்டதால், பெற்றோரே, மகனை வெறுத்து ஒதுக்கி விட்டனர். நிலைமையை புரிந்து கொண்ட புஷ்பவதியின் தந்தை சாமிநாதன் (65), தன் வீட்டிலேயே வைத்து சிறுவனை பராமரித்ததுடன், பள்ளிக்கும் அனுப்பி வந்தார். இப்போது சிறுவன், புதுப்பேட்டை வீதி அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது சாமிநாதனுக்கும் வயதாகி விட்டது. அவரது மனைவி ராஜாமணியும் நோயாளி. 13 வயதான சிறுவனை பராமரிக்க முடியாமல் இருவரும் தடுமாறினர். இதைக்கண்ட தாய்மாமன் ராமு, நேற்று சிறுவனை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார். 'பெற்றோர் சிறுவனை ஏற்க மறுக்கின்றனர். எங்களாலும் பராமரிக்க முடியவில்லை. சிறுவனை கலெக்டர் அலுவலகத்தில் விட்டுச்செல்கிறேன்' என்றார்.அவர் கூறியதாவது:என் சொந்த தங்கை மகன் தான் ராஜ்குமார். பத்தாண்டுகளாக என் தந்தை பராமரித்து வந்தார். இப்போது அவருக்கும் வயதாகி விட்டது. சிறுவன் வீட்டில் இருப்பதால், என் இளைய சகோதரர் திருமணம் தள்ளிப்போகிறது. எனவே, சிறுவனை அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும். அல்லது பெற்றோரிடம் ஒப்படைக்க கலெக்டர் உதவி செய்ய வேண்டும், என்றார். இதுபற்றி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டர் கருணாகரனிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவுரைப்படி, போலீஸ் மூலம் சிறுவனின் பெற்றோருக்கு, 'கவுன்சிலிங்' கொடுத்து, அவர்களே பராமரிக்கும் வகையில் ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அதிகாரிகள், 'அதற்கு ஓரிரு நாட்கள் பிடிக்கும். அதுவரை தொடர்ந்து பராமரிக்கும்படி' சிறுவனின் மாமாவிடம் கூறினர். ஆனால் அவர், 'என்னால் சிறுவனை பராமரிக்க முடியாது. என் பெற்றோருக்கும் உடல் நலம் சரியில்லை' என்று கூறினார். அதிகாரிகளின் அறிவுரைப் படி, சிறுவனை மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகத்தில் விட்டுச் சென்றார், ராமு.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜேஸ்மின் கூறியது: கலெக்டர் உத்தரவுப்படி, சிறுவனை தற்காலிகமாக ஒரு காப்பகத்தில் வைத்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் பெற்றோருக்கு போலீஸ் மூலம் கவுன்சிலிங் வழங்கவும், முயற்சி மேற்கொண்டுள்ளோம். கை, கால் செயல் இழந்த நிலையில் இருப்பது, அந்த குழந்தையின் தவறல்ல; குழந்தையை இப்படி விட்டுச்செல்வதும் தவறு. பராமரித்து, வளர்க்க வேண்டிய கடமை இருக்கும் பெற்றோர், குழந்தையை கைவிடுவதும் சட்டப்படி குற்றம். குறிப்பிட்ட இந்த சிறுவனின் பராமரிப்புக்காக, அரசு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. அந்த தொகையை, மாதா மாதம் வாங்கிக்கொண்டும், சிறுவனை பராமரிக்க மறுக்கின்றனர். நானும் சிறுவனின் பெற்றோரை நேரில் சந்தித்து பேசவும், கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்திருக்கிறேன், என்றார்.