ADDED : செப் 03, 2011 11:26 PM
மஞ்சூர் : தொடர்ந்து பெய்து வரும் மழையால் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளான எமரால்டு, இத்தலார், போர்த்தி, பெம்பட்டி, பேலிதளா, மணிஹட்டி, மீக்கேரி, பாலகொலா, கல்லக்கொரை, நுந்தளா, தாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மலை காய்கறிகளான உருளை கிழங்கு, முட்டை கோஸ், பீட்ரூட், காரட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்டவைகள் விளைவிக்கப்படுகின்றன. கடந்த 2 மாதங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருவதுடன் சில நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. கன மழைக்கு தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகள் மழைக்கு அழுகியும், கன மழைக்கு அடித்து செல்லப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து மணிஹட்டி பகுதி விவசாயி லிங்கன் கூறுகையில்,''மலை காய்கறி தோட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகும் நிலையில் காணப்படுகிறது. மலை காய்கறி பயிர், மருந்து தெளிப்பான்களுக்கு அதிகம் விலை உள்ள சூழ்நிலையில் மலை காய்கறி விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும்,'' என்றார்.


