Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் : பொதுப்பணித்துறை எல்லை கணக்கீடு தாமதம்

வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் : பொதுப்பணித்துறை எல்லை கணக்கீடு தாமதம்

வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் : பொதுப்பணித்துறை எல்லை கணக்கீடு தாமதம்

வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் : பொதுப்பணித்துறை எல்லை கணக்கீடு தாமதம்

ADDED : செப் 16, 2011 01:38 AM


Google News

மேட்டூர்: மேட்டூர் வருவாய்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பொதுப்பணித்துறை நிலத்தை அளந்து எல்லை கணக்கீடு செய்யும் பணி தாமதமாகிறது.

அதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரக்தியில் உள்ளனர். மேட்டூர் அணை மொத்தம் நீர்மட்டம் 120 அடி. கொள்ளளவு 93.470 டி.எம்.சி.,யாகும். அணை அடிவாரத்தில் மேட்டூர் நகரம் அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காலத்தில் அணையை பாதுகாக்க, வலதுகரை பகுதியில், 40 ஆயிரம் கனஅடி உபரி நீரை வெளியேற்றும் வகையில் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது.



அதிகபட்ச நீர்வரும் பட்சத்தில் மண் அணையை உடைத்து தண்ணீர் வெளியேற்றப்படும். அந்த தண்ணீர் வெளியேறும் நிலப்பகுதி முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. காலப்போக்கில் அப்பகுதியை பொதுமக்கள் ஏராளமானோர் ஆக்ரமித்து குடியிருப்புகளை கட்டி கொண்டனர். சமீபகாலமாக உபரி நீர் போக்கு அருகாமையில் உள்ள பொதுப்பணித்துறை நிலத்தை ஆக்ரமித்து குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் உபரி நீர்போக்கு அடிவாரத்திலும் குடியிருப்பு உருவாகி விடும் என்பதால், விழித்து கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை பாதுகாக்க, அந்த நிலத்தில் மரக்கன்றுகள் வளர்க்க முடிவு செய்துள்ளனர்.



நிலத்தை அளந்து, வரையறை செய்து விட்டால், எல்லை கற்கள் நட்டு மரக்கன்றுகள் நட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர். வருவாய்துறை, மேட்டூர் நகராட்சி அதிகாரிகள் தங்கள் சர்வே குழுவினரை அனுப்பாமல் இழுத்தடிப்பதால் எல்லை கணக்கீடு செய்யும் பணி தாமதமாகிறது.



இதுகுறித்து மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுப்பணித்துறை எல்லை வரையறை செய்து விட்டால், உடனடியாக எல்லை கற்கள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு விடுவோம். சர்வேயர்கள் அனுப்பி எல்லையை அளந்து தரும்படி மேட்டூர் வருவாய் துறைக்கும், மேட்டூர் நகராட்சிக்கும் இதுவரை, 10க்கும் மேற்பட்ட அறிக்கை அனுப்பி விட்டோம். சர்வேயர்களை அனுப்பி வைக்கவில்லை. அதனால், பொதுப்பணித்துறை எல்லையை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மேட்டூரில் பொதுப்பணித்துறை எல்லையை அளவீடு செய்ய சர்வேயர்களை அனுப்பி வைக்காமல், பல மாதங்களாக வருவாய்துறையும், நகராட்சியும் இழுத்தடிப்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us