ADDED : செப் 24, 2011 05:41 PM
ரா@லகான் சித்தி: தேர்தல் சீர்திருத்தம் குறித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவில் உள்ள சொந்த கிராமமான ரா@லகான் சித்தியில், அன்னா ஹசாரே நிருபர்களிடம் கூறியதாவது: நம் நாட்டின் அரசியல் திட்டம், ஜனநாயகம் குறித்து, பிரதமர் என்ன நினைக்கிறார் என, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தம் குறித்தும், சரியில்லாத உறுப்பினர்களை வாபஸ் பெறுவது குறித்தும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது தொடர்பாக, விளக்கம் அளிக்கும் படியும் கோரியுள்ளேன். ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தொடர்ந்து, தற்போது தேர்தல் சீர்திருத்தம் குறித்த பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறேன். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து ஊராட்சிகளும், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என, கடிதம் எழுத இருக்கிறேன். அனைத்து ஊராட்சிகளும், தங்கள் மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும், ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என கோரி, பார்லிமென்ட் நிலைக் குழு தலைவர் அபிஷேக் சிங்விக்கும், மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதும்படியும் கேட்டுள்ளேன். ஒவ்வொரு மாநிலத்திலும், லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும், ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்ற வேண்டும் என கோரி, எனது ஆதரவாளர்களை தெரு முனை கூட்டங்களை நடத்தும்படி கேட்டுள்ளேன். இவ்வாறு, அன்னா ஹசாரே கூறியுள்ளார்.


