
மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: தே.மு.தி.க., தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சி தான்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேட்டி : பீகாரில் ஊழலை ஒழித்து, திறமையான நேர்மையான நிர்வாகத்தை, மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில், உறுதியாக இருக்கிறேன். ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப் படும். லஞ்சம், ஊழல் இல்லாத மாநிலமாக, பீகார் மாற வேண்டும். அதற்காக, ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்.
மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி பேட்டி: ஐக்கிய அரபு நாட்டில் வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், இணையதள வழியில் பதிவு செய்யப்பட்டு, பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் மூலம், இந்தியர்கள் குறிப்பிட்ட பணிக்கு அழைக்கப்பட்டு, பின், கீழ்த்தரமான பணி கொடுக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவது தடுக்கப்படும். அனைத்து மாநில அரசுகளும், வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அலுவலகத்தைத் தொடங்க வேண்டும்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேட்டி: இன்றைய நிலையில், உலக அளவில் முதலீடுகளைக் கவர்ந்து ஈர்க்கும் இடமாக, இந்தியா விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில், நேரடி அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. எனினும், பொருளாதார வளர்ச்சியின் பலன்கள், சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைய வேண்டும். குறிப்பாக, ஏழை மக்களுக்குச் சென்றடைய வேண்டும். இதை, நாம் உறுதி செய்ய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமனின் தனிச் செயலர் சுந்தர ராஜன் பேட்டி: தேசத்திற்காகப் போராடியது எங்கள் கட்சி தான் என்று, இன்றைய காங்கிரஸ் சொல்வது உண்மையல்ல. காரணம், இப்போது இருக்கும் காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரசே அல்ல. இன்றைய காங்கிரசிற்கு வயது வெறும், 41 ஆண்டுகள் தான்.
தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலர் சண்முகம் அறிக்கை: இந்த ஆண்டு நெல் உற்பத்தியை, 115 லட்சம் டன்னாக உயர்த்திட, தமிழக அரசு இலக்கு தீர்மானித்திருக்கிறது. ஆனால், நெல் விலை குறித்த அரசின் அறிவிப்பு, இந்த இலக்கை அடைய அரசு விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, நெல் விலையை, குவிண்டால் ஒன்றுக்கு, 1,500 ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்குக் கிடைக்கும் வகையில், உயர்த்தி அறிவிக்க வேண்டும்.


