ADDED : ஆக 03, 2011 01:17 AM
கோவை : மத்திய அரசின் 'சிறந்த பொறியியல் கண்டுபிடிப்பாளர் விருது' பெற்ற முருகானந்தம்; தமிழக அரசின் 'கலைமாமணி விருது' பெற்ற நாவலாசிரியர் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு, அகில இந்திய தேவாங்கர் சமுகநல சங்கத்தின் கோவை மாவட்ட கமிட்டியின் சார்பில் 'தேவாங்ககுல செம்மல் விருது' வழங்கப்பட்டது.அகில இந்திய தேவாங்கர் (தெலுங்கு) சமூக நல சங்கத்தின் கோவை மாவட்ட கமிட்டியின் சார்பில் கல்வி தின பரிசளிப்பு விழா மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு விழா, ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் அனந்தராஜன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரம் வரவேற்றார். நாப்கின் மெஷின் தயாரிப்பில் சிறந்த பொறியியல் கண்டுபிடிப்பாளர் விருதினை பெற்ற முருகானந்தம், 2000க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள் எழுதி சாதனை படைத்து தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ராஜேஷ் குமார் ஆகிய இருவரின் சாதனைகளை பாரட்டி'தேவாங்ககுல செம்மல்' விருது வழங்கப்பட்டது. விருதை மாவட்ட தலைவர் அனந்தராஜன் வழங்கினார். பள்ளி, கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவ-மாணவியர் மூன்று பேரை தேர்ந்தெடுத்து கல்வியாண்டுக்கான முழுசெலவையும் சங்கம் ஏற்றுக்கொண்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவாங்க சமூக மாணவ, மாணவிகளில் 80 சதவீதத்திக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.