ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை : 'தமிழக அரசு, ஐகோர்ட் தீர்ப்பை ஏற்று, சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இது தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: தமிழக அரசு ஏற்கனவே கொண்டு வந்த, பொதுப்பாடத் திட்டத்தை, அப்படியே செயல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., அரசு கொண்டு வந்த பாடத் திட்டத்தில், கருணாநிதி குடும்பத்தின் சுய புராணம் பாடும் பகுதிகளை நீக்கி, தரமுள்ள புதிய பாடத் திட்டங்களை கல்வி நிபுணர்கள் குழுவின் மூலம் சேர்த்து, பாடத் திட்டத்தின் தரத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும். தமிழகத்தில் கல்வியின் தரம் வெகுவாக குறைந்துள்ளது. அதை மேலும் குறைக்கவே, தி.மு.க., அரசு கொண்டு வந்த பொதுப்பாடத்திட்ட சட்டம் வழி செய்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசின் உதவி பெற்ற பள்ளிகளிலிருந்து, அகில இந்திய அளவில் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பதிலிருந்தே கல்வியின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த ஆட்சியால் ஏற்பட்ட சீர்கேட்டினைக் களைய, தமிழக அரசு கல்வி சம்பந்தமான அனைத்து விவரங்களையும் திரட்டி, ஒரு வெள்ளை அறிக்கை கொண்டு வர வேண்டும். சட்டசபையில் அனைத்து கட்சியினரையும் கலந்து, விரிவான கல்வி சீர்திருத்த சட்டத்தை கொண்டு வர வேண்டும். நாம் கேட்பது குதிரையானாலும், கிடைத்திருப்பது கழுதைதான். குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. உடனடித் தேவையாக இருப்பது, பள்ளிக்கூடங்களை, பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவது தான். எனவே, தமிழக அரசு, ஐகோர்ட் தீர்ப்பை ஏற்று, உடனே பள்ளிக்கூடங்கள் இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: தமிழக அரசின் வீண் பிடிவாதத்தால், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்க வேண்டிய தேதி, 15 நாட்கள் தள்ளிப்போனது. பின் திறக்கப்பட்டு, ஒன்றரை மாதங்களாகியும், மாணவர்களுக்கு எந்தப் பாடங்களை படிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலே, இதுபோன்ற ஒரு சூழல், இதுவரை கல்வித்துறையில் ஏற்பட்டதில்லை. 'சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த, வரும் 22ம் தேதிக்குள், சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பாடங்களை நடத்த துவங்க வேண்டும். குறைபாடுகளைக் களைந்து புதிய பாடங்களை, கூடுதல் புத்தகங்களாக அச்சிட்டு, மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்' என ஐகோர்ட் தெளிவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை ஏற்காமல், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின், நெறிமுறையற்ற, தான்தோன்றித்தனமான போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். அரசு, தவறு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து, மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: முறையான சமச்சீர் கல்வி திட்டத்தை, பா.ஜ., தொடர்ந்து வரவேற்று வந்துள்ளது. தி.மு.க., அரசு அவசர கோலத்தில், திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தது. அ.தி.மு.க., அரசு முழுமையாக கிடப்பில் போட முயற்சித்தது. தற்போது சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. , ஜூலை 20-மேல் முறையீடு செய்ய அ.தி.மு.க., அரசு முயற்சிக்கிறது. ஏற்கனவே, எந்த பாடத்திட்டத்தை கடைபிடிப்பது எனக் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மேல் முறையீடு செய்தால், குழப்ப நிலை மேலும் தொடரும். மாணவர்களின் எதிர்காலம் கவலைக்கிடமாகும். மாணவர்கள் நலன் கருதி, தமிழக அரசு, மேல் முறையீடை கைவிட்டு, உடனே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.


