கோவை : 'தி.மு.க., - காங்., கூட்டணி குறித்து, இன்று நடக்கும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்,'' என, எம்.பி., டி.ஆர்., பாலு தெரிவித்தார்.கோவையில், தி.மு.க.,வின் செயற்குழு கூட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட கழக வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
தி.மு.க., வின் பொறுப்புகளில் இருப்போர் மீது, பழிவாங்கும் நோக்கோடு போலீசாரை ஏவி விடும் போக்கை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஆலந்தூர் பாரதி பேசுகையில்,''தி.மு.க.,வுக்கு எப்போதெல்லாம் சோதனை வருகிறதோ, அப்போதெல்லாம் வக்கீல்கள் அணி உறுதுணையாக நின்று, கழகத்தை காக்கிறது. எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும், எமர்ஜென்சி காலத்திலும், கழகம் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் முறியடிக்கப்பட்டன. 1996ல், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, வக்கீல்களால் தொடுக்கப்பட்ட டான்சி வழக்கால் தான், அவர் பதவியிறங்க காரணமாயிற்று,'' என்றார்.இன்று தெரியும்: செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.பி., டி.ஆர்.பாலுவிடம், 'தி.மு.க., - காங்., கூட்டணி எந்த நிலையில் உள்ளது' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ''நாளை (இன்று) நடக்கும் பொதுக்குழுவில், இப்பிரச்னை மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் பிரச்னைகளையும் விவாதித்து முடிவு செய்யப்படும். மத்திய அமைச்சரவையில், தி.மு.க.,வை சேர்ந்த இருவருக்கு வாய்ப்பளிக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்படும்,'' என்றார்.