10 நிமிடத்தில் தென்மாவட்ட ரயில்கள் "ஹவுஸ் புல்'
10 நிமிடத்தில் தென்மாவட்ட ரயில்கள் "ஹவுஸ் புல்'
10 நிமிடத்தில் தென்மாவட்ட ரயில்கள் "ஹவுஸ் புல்'
ADDED : ஜூலை 24, 2011 11:02 PM

சென்னை : தீபாவளியை முன்னிட்டு, தென்மாவட்ட ரயில்களில் , அக்., 22ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு, 10 நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் முன்பதிவு நடக்கிறது. இதில், அக்., 21ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு, நேற்று முன்தினம் நடந்தது. முன்பதிவு துவங்கிய அரை மணி நேரத்திலேயே, தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. பாண்டியன், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரயில்களில், காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் உள்ளனர். அதே போல், 22ம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று காலை துவங்கியது. இதையடுத்து, பொதுமக்கள், நேற்று முன்தினம் இரவு முதலே ரயில் முன்பதிவு மையங்களில் குவிந்தனர். நேற்று காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய 10 நிமிடங்களிலேயே பாண்டியன், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிரம்பி விட்டன. அடுத்த சில நிமிடங்களில், முத்துநகர், பொதிகை, அனந்தபுரி என, தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. பாண்டியனில் 133, கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் 31, அனந்தபுரி எக்ஸ்பிரசில் 42, முத்துநகர் ரயிலில் 58, நெல்லை எக்ஸ்பிரசில் 72 பேர், காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதே நேரத்தில், பகல் நேர ரயில்களில் மட்டும் இருக்கை வசதி உள்ளது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 375 இருக்கைகள், வைகை எக்ஸ்பிரசில் ஆயிரத்து 79 இருக்கைகள் உள்ளன. அக்., 23ம் தேதி முதல் பயணிப்பதற்கான முன்பதிவு இன்று முதல் நடக்கிறது. ஏமாற்றத்தைத் தவிர்க்க, பொதுமக்கள் முன்னதாகவே முன்பதிவு மையங்களுக்கு சென்றால் தான், இருக்கை வசதியை உறுதி செய்ய முடியும்.


