வன நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு"குறி' பீதியில் தி.மு.க., முன்னாள் பிரமுகர்கள்?
வன நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு"குறி' பீதியில் தி.மு.க., முன்னாள் பிரமுகர்கள்?
வன நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு"குறி' பீதியில் தி.மு.க., முன்னாள் பிரமுகர்கள்?
மாநிலம் முழுவதும் நிலங்களை அபகரித்தோர் மீது, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதும், எம்.எல்.ஏ.,க்கள் மீதும், புகார்கள் குவிகின்றன. பல்வேறு மாவட்டங்களில் முக்கிய பிரமுகர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த நடவடிக்கையாக, தி.மு.க., ஆட்சியின் போது, அரசியல் பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வன நிலங்கள் குறித்தும், அவர்கள் செய்த ஊழல்கள் குறித்தும், வனத்துறை மூலம் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வன நில அபகரிப்பு வழக்குகள் தொடரப்படுமோ என்ற பீதியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், பிரமுகர்களும் உள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆட்சியின் போது, தமிழகத்தில் வனப்பரப்பு, 17.70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது, முற்றிலும் பொய்யான தகவல். கோவை மாவட்டத்தில் 2005ல், 25 சதவீதமாக இருந்த வனப்பகுதி, 2010ல், 22 சதவீதமாக குறைந்து விட்டது. ராமநாதபுரத்தில், 6.45 சதவீதமாக இருந்த வனப்பகுதி, 2 சதவீதமாகவும், வேலூரில், 31ல் இருந்து 28 சதவீதமாகவும், தேனியில், 39ல் இருந்து, 36 சதவீதமாகவும், கடலூரில், 13ல் இருந்து 11 சதவீதமாகவும் வனப்பகுதி குறைந்துள்ளது.
கடந்த ஆட்சியில், தி.மு.க., பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பரப்புகளை மீட்டால் தான், தமிழகத்தில் வனப்பரப்பின் சதவீதம் உயரும். தற்போது, மாநிலம் முழுவதும் வன நிலங்களை சுருட்டிய பிரமுகர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் வன நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வன நிலங்கள் மீட்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -


