/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சேவை விருதுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லைசேவை விருதுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லை
சேவை விருதுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லை
சேவை விருதுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லை
சேவை விருதுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இல்லை
ADDED : ஆக 11, 2011 01:02 AM
சிவகங்கை : சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டும், இளைஞர்களிடையே போதிய ஆர்வமில்லாததால் குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு ஜனவரி 12ல் தேசிய அளவிலான இளைஞர் விழாவை கொண்டாட திட்டமிட்டுள்ளது. சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை செய்யும் இளைஞர்களை ஊக்குவிக்கவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கவுரவிக்கவும் இந்த விழாவில் 'தேசிய இளைஞர் விருது' வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் 13 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் குறைந்தது மூன்று ஆண்டு வரை சமூக தொண்டு செய்த விபரங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மாவட்ட கலெக்டரால் அமைக்கப்பட்டுள்ள குழு இவர்களை தேர்வு செய்யும். தனிநபர்கள் தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறாமல் தொண்டு செய்து இருக்க வேண்டும், மத்திய, மாநில அரசு மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க கூடாது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, சங்க விதிகளின்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். லாப நோக்கம் இருக்க கூடாது, சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் விண்ணப்பிக்க இயலாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டதற்கான புகைப்பட ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம். மாநில அளவில் 10 பேருக்கு சான்றிதழ் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். மாநில அளவில் இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு 2 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜூலை 31 அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை மாநில அளவில் குறைவான எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் வந்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாவட்டத்திற்கு அதிக பட்சமாக 2 விண்ணப்பங்களே வந்துள்ளன.
மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் லாப நோக்கத்துடனே செயல்படுவதால் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளன. என்றார்.


