Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அணி திரள்கிறது கோவை : ஊழலுக்கு எதிராக உங்கள் குரலும் ஒலிக்கட்டும்

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அணி திரள்கிறது கோவை : ஊழலுக்கு எதிராக உங்கள் குரலும் ஒலிக்கட்டும்

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அணி திரள்கிறது கோவை : ஊழலுக்கு எதிராக உங்கள் குரலும் ஒலிக்கட்டும்

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக அணி திரள்கிறது கோவை : ஊழலுக்கு எதிராக உங்கள் குரலும் ஒலிக்கட்டும்

ADDED : ஆக 19, 2011 01:39 AM


Google News

கோவை : ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், கோவையில் நாளை (20ம் தேதி) மாலை 5 மணிக்கு கொடிசியா வளாகம் முன்புறம் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

ஊழல் ஒழிப்பில் ஆர்வமுள்ள, அனைத்து தரப்பினரும், மெழுகுவர்த்தியுடன் வந்து பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



'ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தி போராடி வருகிறார், காந்தியவாதி அன்னா ஹசாரே. 'எதிர்கால இந்திய சமுதாயம், வளமானதாக, வலுவானதாக இருக்க வேண்டும்' என்ற அவரது அக்கறையும், ஆர்வமும் தான், தள்ளாத வயதிலும், அவரை போராட்டத்தில் ஈடுபட தூண்டியுள்ளன. ஆனால், அன்னா ஹசாரேவின் நோக்கத்திற்கு செவிசாய்க்க மத்திய அரசு மறுத்ததால், காந்திய வழியில் மீண்டும் தன் போராட்டத்தை தொடங்கியுள்ளார். அவரது நோக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த மக்கள், நாடு முழுவதும் தாங்களாகவே திரண்டு வெவ்வேறு வழிகளில் போராட்டத்தை துவக்கி விட்டனர். அந்த வகையில், கோவை மக்களும், அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அணி திரள துவங்கியுள்ளனர். கோவையை சேர்ந்த பல சமூக, தன்னார்வ நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளுடன் இணைந்து, 'ஊழலுக்கு எதிராக கோவை' என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அன்னா ஹசாரே ஆதரவு போராட்டத்தை துவங்கியுள்ளனர்.



புதிய அமைப்பின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாக, இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் கிருஷ்ணன், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், கொடிசியா தலைவர் கந்தசாமி, கிருஷ்ணகுமார், ஹரிகிருஷ்ணன், ரவி ஷாம், மோகன் சங்கர், பாலசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்தை ஆதரிக்கும் வகையில், வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முன்புற மைதானத்தில், நாளை மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். இதில், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், குடும்பத்தலைவிகள், முதியோர் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்தோடு பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இக்கூட்டத்தில், மதுரையை சேர்ந்த பேராசிரியர் ராஜாராம், ஊழல் ஒழிப்பின் அவசியம் பற்றி பேசுகிறார். சென்னை கிருஷ்ணா பஜன் நிகழ்ச்சியும் நடக்கிறது. இது தவிர, லோக்பால் சட்டத்தின் அவசியம், அதில், கட்டாயம் இருக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து, 'ஊழலுக்கு எதிராக கோவை' அமைப்பின் நிர்வாகக்கமிட்டி உறுப்பினர்கள் கூறியதாவது: கோவை மக்கள் அனைவரும், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வருவோர், நிகழ்ச்சி இறுதியில் ஏற்றுவதற்காக, மெழுகுவர்த்தியுடன் வர வேண்டும். அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில், மக்கள் அனைவரும் வீடுகளில், ஊழல் எதிர்ப்பை குறிக்கும் வகையில், நீலக்கொடி ஏற்ற வேண்டும், கைகளில் நீல நிற 'பேண்ட்' அணிய வேண்டும், வாகனங்களில் நீலக்கொடி ஏற்றுவதுடன், அன்னா ஹசாரேவை ஆதரிக்கும் வாசகங்கள் எழுதியும் தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம். நீல நிறம் தூய்மையை குறிக்கிறது. எனவே தான், ஊழல் எதிர்ப்பின் சின்னமாக நீலக்கொடியை தேர்வு செய்தோம். இளைஞர்கள் தான், இந்தியாவின் சக்தி. அவர்கள் மத்தியில் இந்த போராட்டம் பற்றிய தகவல்களை கொண்டு சேர்க்க அனைவரும் முன் வர வேண்டும். வர்த்தகர்கள் அனைவரும், நாளைய தினம் நிகழ்ச்சி நடக்கும் இரண்டு மணி நேரமும் கடைகளை அடைத்து விட்டு வந்து நேரடியாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.



இன்று உண்ணாவிரதம்; 21ல் பொதுக்கூட்டம் : ஊழலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்புறம் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தூண் அமைப்பு சார்பில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. 'கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர், வர்த்தகர்கள், குடியிருப்போர் சங்கத்தினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், அனைத்து சமூக அமைப்புகளும், இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என்று, ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த், இயக்குனர் ராஜ்குமார் வேலு, காப்பாளர் மோகன் சங்கர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, 'ஊழலுக்கு எதிராக இந்தியா' அமைப்பு சார்பில், கோவை சிவானந்தா காலனியில் பொதுக்கூட்டமும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், 'லோக்பால்' சட்ட மசோதா பற்றிய விளக்கம் அளிக்கப்படுகிறது. குழந்தைகள் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடக்கும் உண்ணாவிரதம், 21ல் நடக்கும் பொதுக்கூட்டம் ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்கும், 'ஊழலுக்கு எதிராக கோவை' அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



கல்லூரிகள் கவனத்துக்கு... : 'ஊழலுக்கு எதிராக கோவை' அமைப்பு நாளை 20ம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் அவசியமாகிறது. எதிர்கால இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளான மாணவர்களின் ஆதரவும் நிச்சயம் தேவை. மாணவர்கள் மனதில் ஊழலுக்கு எதிரான சிந்தனையை விதைக்கும் அரிய வாய்ப்பு, நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சியின் மூலம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த விருப்பமுள்ள கல்லூரி நிர்வாகத்தினர், தங்களது கல்லூரி பஸ்களின் மூலம் மாணவ, மாணவியர், நிகழ்ச்சி நடக்கும் கொடிசியா வளாகத்துக்கு வந்து சேர உதவலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு, 0422-2318222, 0422-2318333, 98946 31551 என்ற எண்களில், 'சிறுதுளி' அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us