Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அலைக்கழிக்கப்படும் தனியார் பள்ளிகள்!புத்தகம் தருவது எப்போது?

அலைக்கழிக்கப்படும் தனியார் பள்ளிகள்!புத்தகம் தருவது எப்போது?

அலைக்கழிக்கப்படும் தனியார் பள்ளிகள்!புத்தகம் தருவது எப்போது?

அலைக்கழிக்கப்படும் தனியார் பள்ளிகள்!புத்தகம் தருவது எப்போது?

ADDED : ஆக 21, 2011 11:53 PM


Google News
கோவை : கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் கிடைக்க இன்னும் ஒரு மாத காலம் ஆகும் நிலைமை உருவாகியுள்ளது.

'காலாண்டு தேர்வுக்கு முன் புத்தகங்கள் கிடைக்க, தினக்கூலி அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை நியமித்து வினியோகத்தை துரிதப்படுத்த வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பின், அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த 17 முதல் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசுப்பள்ளிகளுக்கு பாடப்புத்தக வினியோகம் முடிவடைந்து விட்டது. தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளோ, புத்தக விலைக்கான வரைவோலையுடன் ஒண்டிப்புதூரில் உள்ள தமிழ்நாடு பாட நூல் நிறுவன குடோன்களில் காத்துக் கிடக்கின்றனர். பாடப் புத்தக வினியோகத்துக்கு போதுமான ஊழியர்களை கல்வி அலுவலர்கள் நியமிக்காததே காரணம். இதனால் தினமும் மூன்று லாரிகள் மூலம் மட்டுமே புத்தக வினியோகம் நடக்கிறது. கோவை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டுமல்ல, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் ஒண்டிப்புதூர் குடோனில் இருந்துதான் புத்தகம் அனுப்பி வைக்கப்படுகிறது. வினியோகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு முன் பாடப்புத்தகங்கள் கிடைப்பது சந்தேகமாக உள்ளது.இது குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் கணேஷ் கூறியதாவது:பாடநூல் குடோனில் இரண்டு ஊழியர்கள் மட்டுமே புத்தக வினியோக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு மூன்று லாரிகளில் மட்டுமே புத்தகங்களை ஏற்றி அனுப்ப முடிகிறது. ஒரு லாரியில் ஏற்றிச் செல்லும் புத்தகங்களை பத்து பள்ளிகளுக்கு மட்டுமே வினியோகிக்க முடியும். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 900 தனியார் பள்ளிகள் உள்ளன. ஒரு நாளைக்கு மூன்று லாரிகள் வீதம் 30 பள்ளிகளுக்கு மட்டுமே புத்தகங்களை கொண்டு சேர்க்க முடியும் நிலை உள்ளதால், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் சென்றடைய 30 நாட்கள் ஆகலாம். இதனால் காலாண்டு தேர்வுக்கு முன் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் கிடைப்பது சந்தேகமாக உள்ளது. குடோனில் தினக்கூலி அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, புத்தக வினியோகத்தை துரிதப்படுத்த கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் தொகையை, பள்ளிக்கு ரூ.200 வீதம் கேட்டாலும் அளிக்கத் தயாராக உள்ளோம். கடந்த மூன்று நாட்களாக பள்ளிக்கு ஐந்து ஆசிரியர்கள் வீதம், காலையில் வந்து மாலையில் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியதுள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, செலவுகளும் அதிகரிக்கிறது. உரிய மாற்று ஏற்பாடுகளை செய்யாத கல்வித்துறையினர் தான் இதற்கு காரணம். கூடுதல் பணியாளர்களை உடனடியாக நியமித்து, ஓரிரண்டு நாட்களுக்குள் புத்தக வினியோகத்தை முடிக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்ப முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, கணேஷ் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us