/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கொண்டாட்டம்அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
ADDED : ஆக 28, 2011 11:48 PM
கோவை : அன்னா ஹசாரே போராட்டம் வெற்றி பெற்றதை, கோவையில் அவரது ஆதரவாளர்கள்
கேக் வெட்டியும், பத்தாயிரம்வாலா பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
வலுவான
லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்தி
வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று காலை நிறைவுக்கு வந்தது. அவரது முக்கிய
கோரிக்கைகள் பார்லிமென்டில் ஏற்கப்பட்டதையடுத்து, நேற்று காலை 10.20
மணிக்கு பழச்சாறு குடித்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்துக்
கொண்டார். அன்னா ஹசாரேவுடன் இணைந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வந்த
பொது நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி
வருகின்றனர். கோவை ராம்நகரில், 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின்
அலுவலகத்தில் நேற்று காலை குழுமிய அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள், தேசிய
கொடியேந்தியபடி 10 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். சுற்றிலும் நின்றிருந்த
கல்லூரி மாணவர்கள் 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கீ ஜெய்', 'ஜெய் ஜெய் அன்னா
ஹசாரே' என கோஷமிட்டனர். பத்தாயிரம்வாலா பட்டாசு வெடித்தும், இனிப்பு
வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். 'ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின்
கோவை மாவட்ட நிர்வாகிகள் பிரவீன் சீனிவாசன் மற்றும் ஹரி கிருஷ்ணன்
கூறியதாவது: லோக்பால் மசோதாவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது. சுதந்திரத்துக்குப் பின் தகவல் உரிமைச் சட்டத்தை இரண்டாவது
சுதந்திரமாக நினைத்து கொண்டாடி வந்தோம். இப்போது லோக்பால் மசோதா அதை மிஞ்சி
விட்டது. தகவல் உரிமைச் சட்டத்தை, பெரும்பாலும் படித்தவர்கள் மட்டுமே பயன்
படுத்தும் நிலை உள்ளது. ஆனால் லோக்பால் மசோதா பார்லிமென்டில்
நிறைவேற்றப்பட்டால், நாட்டு மக்கள் அனைவரும் பயன் அடைவர். ஊழல் தொடர்பான
குற்றச் செயல்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை
பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் நிச்சயம் ஒரு
ஆரோக்கியமான மாற்றம் வரும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. இது அன்னா
ஹசாரேவுக்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ மட்டும் கிடைத்துள்ள வெற்றி அல்ல.
அநீதிக்கு தீர்வு காண அன்றாடம் போராடி வரும் ஒவ்வொருவருக்கும் கிடைத்துள்ள
வெற்றி. சிவானந்தா காலனி பகுதியில் விரைவில் தேசப்பற்று நிகழ்ச்சிகளுடன்
பிரமாண்ட வெற்றி விழா நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, நிர்வாகிகள்
கூறினர்.


