Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிதம்பரம் பஸ் நிலையத்தின் அவலம் தொடர்கிறது : அடிப்படை வசதியை மறந்த மக்கள் பிரதிநிதிகள்

சிதம்பரம் பஸ் நிலையத்தின் அவலம் தொடர்கிறது : அடிப்படை வசதியை மறந்த மக்கள் பிரதிநிதிகள்

சிதம்பரம் பஸ் நிலையத்தின் அவலம் தொடர்கிறது : அடிப்படை வசதியை மறந்த மக்கள் பிரதிநிதிகள்

சிதம்பரம் பஸ் நிலையத்தின் அவலம் தொடர்கிறது : அடிப்படை வசதியை மறந்த மக்கள் பிரதிநிதிகள்

ADDED : செப் 06, 2011 10:11 PM


Google News

சிதம்பரத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம், கழிவுநீர் கால்வாய், பஸ்கள் நிற்க பிளாட்பாரம் அமைக்கப்பட்டு சமீபத்தில் இரு அமைச்சர்களால் திறக்கப்பட்ட பஸ் நிலையம் பயணிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் பயணிகள் தவிக்கின்ற அவலம் தொடர்கிறது.

சிதம்பரம் பஸ் நிலையத்தில் இயற்கை இடர்பாடுகள் நிவாரண நிதி 1 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் பஸ் நிலையத்தின் வடக்குப் பகுதியில் சிமென்ட் தளம், மழைநீர் வடிகால், பிளாட்பாரம் ஆகியன அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு பகுதியில் அதே திட்டத்தில் ஒரு கோடியே 20 லட்சம் செலவில் தற்போது சிமென்ட் தளம், வடிகால், பிளாட்பாரம் அமைக்கப்பட்டு கடந்த மாதம் 12ம் தேதி அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், சம்பத் ஆகியோர் திறந்து வைத்தனர்.



பஸ் நிலையத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து சிமென்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுத்த மக்கள் பிரதிநிதிகள், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர ஆர்வம் காட்டவில்லை. இதனால் பயணிகள் தவிக்கும் நிலை தொடர்கிறது. சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருப்பதால் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு ஊழியர்கள் தினமும் சிதம்பரம் வந்து செல்கின்றனர்.

பஸ் நிலையம் 'பி' கிளாஸ் அந்தஸ்து பெற்றது என்றாலும் அதற்கேற்ப சுகாதார வசதி, கழிப்பிட வசதி என எதுவும் இல்லை.



பயணிகள் ஓய்வெடுக்க விஸ்தாரமான ஓய்வறைகள் இருந்தும் பயணிகளுக்கு பயன்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. மாலை 7 மணிக்கு மேல் குடி பிரியர்கள் குடித்து விட்டு கூத்தடிப்பதுடன் அசுத்தம் செய்து விட்டுச் செல்கின்றனர்.இதனால் பயணிகள் அதன் உள்ளே செல்வதற்கே முகம் சுளிக்கின்ற நிலை உள்ளது. பஸ் தவிக்கின்றனர். பயணிகளுக்கு குடிநீர் இல்லை. அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் டேங்க் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் அநியாய விலை கொடுத்து (குடிநீர் பாக்கெட் ஒன்றுக்கு மூன்று ரூபாய்) வாங்கிக் குடிக்கின்ற நிலை உள்ளது.



இலவச சிறுநீர் கழிப்பிடம் இரண்டு உள்ளது. அவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. மற்றொரு இலவச கழிப்பிட கட்டடம் கட்டப்பட்டு சில ஆண்டுகளாகவே திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கட்டண கழிப்பிடத்திற்குள் சென்றால் காசு கொடுத்து நோய் வாங்கி வரவேண்டிய நிலையில் அங்கு சுகாதாரம் இன்றி மோசமாக உள்ளது. அடிப்படை வசதிகளின் நிலைமை இப்படி இருக்க இரவு நேரங்கில் பஸ் நிலையத்திற்குள் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை.பஸ் நிலைய வாயில் பகுதியிலேயே டாஸ்மாக் கடை தொல்லை. உள்ளே சிறு நீர் கழிக்க ஒதுங்கினால் அங்கு பலான விஷயத்தில் சிக்கி பணம், நகையை பறிகொடுத்து விட்டு, உதை வாங்கி வரும் நிலை தொடர்கிறது. பஸ் நிலையத்திற்குள் புறக்காவல் நிலையம் இருந்தும் கூட கட்டுப்படுத்தப்படவில்லை. சிமென்ட் தளம் அமைக்க ஆர்வம் காட்டிய மக்கள் பிரதிநிதிகள் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பஸ் நிலையம் 'பி' கிளாஸ் அந்தஸ்துக்கு உயரும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us