இரு இளைஞர்கள் கொடூர கொலை: போலீசார் தீவிர தேடுதல்
இரு இளைஞர்கள் கொடூர கொலை: போலீசார் தீவிர தேடுதல்
இரு இளைஞர்கள் கொடூர கொலை: போலீசார் தீவிர தேடுதல்
ADDED : செப் 06, 2011 10:29 PM
ஊட்டி: ஊட்டியில், விடுதிக் காப்பாளர் மற்றும் இளைஞர் ஒருவரைக் கொன்று தப்பிய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி கூட்ஷெட் பகுதியில், 'ஒன்னஸ் காட்டேஜ்' என்ற விடுதியை நடத்தி வருபவர் மகேந்திரன்.
இங்கு, தஸ்தகீர்,30, என்பவர் காப்பாளராகப் பணிபுரிந்தார். நேற்று காலை, மகேந்திரன் காட்டேஜ் சென்ற போது, தஸ்தகீர் மற்றும் இளைஞர் ஒருவர் தரையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து மகேந்திரன், ஊட்டி ஜி1 போலீசாருக்கு தகவல் கொடுத்தார். எஸ்.பி., டி.எஸ்.பி., மற்றும் போலீசார், கொலை நடந்த காட்டேஜை ஆய்வு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. காட்டேஜ் குத்தகைதாரர் மகேந்திரனிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த மற்றொரு நபரின், பாக்கெட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஓட்டுனர் உரிமத்தில், அப்துல் ஹயாஸ்,25, ஊட்டியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. காட்டேஜில் தங்கியிருந்தவர்கள், வெள்ளை நிற 'டவேரா' வாகனத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. வாகனம் குறித்து, அனைத்து சோதனைச் சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தஸ்தகீருக்கு இன்னும் ஒரு வாரத்தில், திருமணம் நடப்பதாக இருந்தது. அவரது திருமணம் காரணமாக, 'பேச்சுலர் பார்ட்டி' நடந்த போது கூட, இந்த கொலை நடத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே இரட்டைக் கொலை நடந்து, 3 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, மீண்டும் கொடூரமான இரட்டைக் கொலை நடந்துள்ள சம்பவம், மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


